இலங்கையில் திடீரென நிறைந்து வழியும் கொரோனா நோயாளிகளால் திணறும் சுகாதார துறை

இலங்கையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1804 யை கடந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொற்று நோய் விஞ்ஞான பிரிவினால் வெளியிடப்பட்ட அறிக்கைக்கமைய இலங்கை வைத்தியசாலைகளில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகபட்சத்தை எட்டியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

கொரோனா தொற்றுக்குள்ளான நோயாளிகள் நாடு முழுவதும் 11 வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் 5 வைத்தியசாலைகளில் 100 நோயாளிகளை கடந்துள்ளது.

இந்நிலையில் மேலும் நோயாளிகள் அதிகரித்தால் நோயாளிகளை அனுமதிப்பதற்கு மேலும் சில வைத்தியசாலைகள் ஒதுக்க நேரிடும் என குறிப்பிடப்படுகின்றது.

வேறு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெறும் வைத்தியசாலைகளில் கொரோனா நோயாளிகளும் சிகிச்சை பெறுவதனால் வைத்தியசாலை ஊழியர்கள் பரபரப்பான பணியில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை கடற்படையினர் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் உட்பட 1804 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 902 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏனையவர்கள் முழுமையாக குணமடைந்து வீடு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய தினம் 33 பேர் முழுமையாக குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளதுடன் நாட்டில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.