பாடசாலை ஆரம்பிப்பது தொடர்பாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு

கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை அதிபர்களின் நிலைப்பாடுகளை கேட்டறிந்து அவை தொடர்பில் ஆராய்ந்த பின்னரே உயர்தர பரீட்சை நடத்தப்படும் தினம் பற்றிய இறுதி தீர்மானம் அறிவிக்கப்படும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இன்று அறிக்கையொன்றினை வெளியிட்டு இதனைத் தெரிவித்திருக்கும் அவர் அதில் மேலும் கூறியிருப்பதாவது :

கொவிட்-19 பரவல் காரணமாக இவ்வருடம் மிகக் குறைவான நாட்களே பாடசாலைகள் நடத்தப்பட்டன. அதன் காரணமாக பாடத்திட்டங்களை பூர்த்தி செய்ய முடியாமல் போன காரணத்தினால் இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் பெறும் சவாலுக்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ளது.

அதனைக் கருத்திற் கொண்டு உயர்தர பரீட்சைகளை ஒத்தி வைக்குமாறு பெரும்பாலானவர்களால் கல்வி அமைச்சர் மற்றும் அமைச்சிடம் தொடர்ச்சியாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

நாட்டில் காணப்படும் நிலைவரத்தில் இந்த கோரிக்கையை பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் அடிப்படை உரிமையாகக் கருதி இது தொடர்பில் மேலும் ஆராயப்பட்டது.

அதற்கமைய தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளதைப் போன்று செப்டெம்பர் 7 ஆம் திகதி உயர்தர பரீட்சைகளை நடத்துவது மாணவர்களுக்கு ஏற்புடையதாக இருக்குமா என்று ஆராயுமாறு கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும பரீட்சைகள் ஆணையாளர் உள்ளிட்ட கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

எதிர்வரும் ஜூலை மாதம் 6 ஆம் திகதி பாடசாலை ஆரம்பிக்கப்பட்டவுடன் உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு கற்பித்தலில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை அதிபர்களின் நிலைப்பாடுகளைக் கேட்டறிந்து அவை தொடர்பில் ஆராயந்து பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் பரீட்சையை நடத்துவதற்காக இறுதி தினம் அறிவிக்கப்படும்.