முகக்கவசம் அணியாதோருக்கு தண்டனை – யாழ்ப்பாணத்தில் பொலிஸாரே அணிவதில்லை

முகக் கவசங்களை அணியாதவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் சுகாதார பரிந்துரைகளை ஏற்காதவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்துள்ள அதேவேளை யாழ்ப்பாணத்தில் பொலிஸார் முகக் கவசம் அணியாது சுகாதார பரிந்துரைகளை மீறி செயற்பட்டு வருகின்றனர்.

யாழ்ப்பாணம் திருநெல்வேலி கலாசாலை வீதியில் உள்ள பூட்டிய கடை ஒன்றின் முன்பாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த நான்கு பொலிஸார் சிவில் உடையில் முக கவசம் எதுவும் அணியாது நேற்று வெள்ளிக்கிழமை இரவு 10.30 மணியளவில் நின்று வீதிகளில் செல்பவர்களை வழிமறித்து ” எங்கே செல்கின்றீர்கள் ?” என விசாரணை செய்துகொண்டிருந்தனர். நீங்கள் யார் என கேட்டவர்களுக்கு தாம் கோப்பாய் பொலிஸ் எனவும் சந்தேகம் இருந்தால் பொலிஸ் நிலையம் சென்று விசாரிக்கும் படியும் பதில் கூறியுள்ளனர்.

பொலிஸாரின் செயற்பாடுகள் மது போதையில் இருந்தமை போன்று இருந்தது. சுமார் 10 நிமிடங்களுக்கு மேல் அந்தக்கடை வாசலில் நின்ற பொலிஸார் பூட்டிய கடையில் இருந்து சோடாக்கள் மற்றும் மிக்சர் வகை என்பவற்றை வாங்கி சென்றிருந்தனர்.

அதேவேளை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த போக்குவரத்து பிரிவை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரில் ஒருவர் முக கவசம் எதுவும் அணியாது கடமையில் ஈடுபட்டிருந்தார்.

அதேபோன்றே வடமராட்சி மாலு சந்தியில் நேற்று மாலை நடைபெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்திற்கு சென்றவர்களை கையுறைகள் இன்றி தொட்டு சோதனை செய்த பொலிஸாரின் செயற்பாடு தொடர்பில் கண்டனத்தை தெரிவித்த ஊடகவியலாளர் மீது , தமது கடமைக்கு இடையூறு விளைவித்ததாக நெல்லியடி பொலிஸார் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் பொலிசாரின் செயற்பாடுகள் இந்த நிலையில் இருக்கும் போதே முகக் கவசங்களை அணியாதவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் சுகாதார பரிந்துரைகளை ஏற்காதவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கோவிட் -19 பரவலைக் கட்டுப்படுத்தும் செயலணியின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொலிஸாரே சட்டங்களை மதிக்காது நடந்து கொள்வது தொடர்பில் பலரும் விசனம் தெரிவித்து வருகின்றனர்.