கருணா குற்றவாளியெனின் தூக்குத்தண்டனை நிச்சயம்?

கருணா சட்டத்தின்முன் குற்றவாளியென நிரூபிக்கப்பட்டால் அவருக்கு உயர்நீதிமன்றத்தால் மரணதண்டனை விதிக்கப்படலாம் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவரான ஜனாதிபதி சட்டத்தரணி யூ.ஆர். டி. சில்வா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது…

“கருணா வெளியிட்டுள்ள கருத்துக்களின் அடிப்படையில் அவருக்கு எதிராக வழக்குத் தொடுக்க முடியும். குறிப்பாக இலங்கையிலுள்ள சில சட்டங்களின்கீழ் வழக்குத் தாக்கல் செய்வதற்கான சாத்தியப்பாடுகள் உள்ளன.

குற்றவியல் சட்டத்தின் பிரகாரம் மனிதப் படுகொலையை அடிப்படையாகக் கொண்டு செயற்படலாம். பயங்கரவாத தடைச்சட்டம் இருக்கின்றது.

அதன் பிரகாரமும் நடவடிக்கை எடுக்கலாம். அது மட்டுமல்ல குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச உடன்பாட்டொழுங்கு நடவடிக்கை எடுப்பது தொடர்பிலும் சட்டமா அதிபர் பரீசிலித்து தீர்மானமொன்றை எடுக்கலாம்.

தான் இத்தனைபேரை கொன்றதாகவே கருணா வாக்குமூலம் வழங்கியுள்ளார். யாரினது அச்சுறுத்தலும் இல்லாமல் சுயாதீனமாகவே அவர் அந்த கருத்தை வெளியிட்டுள்ளார். எனவே, அதனை அவருக்கு எதிரான சாட்சியாக பாவிக்கமுடியும்.

முதலில் அவரின் அறிவிப்பு தொடர்பில் விசாரணை நடத்தப்படவேண்டும். அந்தபணி தற்போது ஆரம்பமாகியுள்ளது. அவர் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார். அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. அதேபோல் கருணாவுக்கும் விளக்கமளிப்பதற்கு வாய்ப்பும் வழங்கப்படவேண்டும்.

விசாரணைகள் முடிவடைந்த பின்னர் பொலிஸாரால், அவை சட்டமா அதிபரிடம் ஒப்படைக்கப்படும். அவற்றை உரிய வகையில் பரீசிலித்த பின்னர் சட்டாமா அதிபர் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கும் தீர்மானத்தை எடுக்கலாம்.

இந்த நிலையில் அவர் குற்றவாளியென உயர்நீதிமன்றம் தீர்மானித்தால், மரணதண்டனை விதிக்கப்படலாம். அவ்வாறு இல்லையெனில் விடுபடலாம்” – என்றார்.