ஆனையிறவு போரை வழிநடத்தியது கருணா அல்ல கேர்ணல் பானு – சிங்கள இணையத்தளம்

விடுதலைப் புலிகளின் ஆனையிறவு போர் வெற்றிக்கான காரணம், நான் தான் என அந்த அமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாண தளபதி கருணா அம்மான் கூறினாலும் அந்த போரை வழிநடத்தியது கேர்ணல் பானு என சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.

சன்ன கருணாரத்ன என்பவர் எழுதியுள்ள அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஆனையிறவு போர் குறித்து கருணா பெருமை பேசுவதால், நான் பழைய ஆவணங்களை தேடிப்பார்த்தேன். அதில் எவற்றிலும் கருணாவின் பெயர் குறிப்பிடப்படவில்லை. முழு போர் நடவடிக்கைக்கும் கேர்ணல் பானுவே கட்டளை வழங்கியுள்ளார். 1990 ஆம் ஆண்டு செப்டம்பர் 26 ஆம் திகதி யாழ்ப்பாண கோட்டை தொடர்பாக நடைபெற்ற போருக்கும் பானுவே கட்டளை அதிகாரியாக செயற்பட்டுள்ளார்.

இந்த நிலையில் 2000ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் திகதி ஆனையிறவு இராணுவ முகாமை கைப்பற்றியமைக்காக புலிகள் அமைப்பு நடத்திய நிகழ்வில் கேர்ணல் பானுவே புலிகளின் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றியுள்ளார்.

கருணா அம்மானை அங்கு எந்த இடத்திலும் காண முடியவில்லை. ஆயைிறவு போர் தொடர்பான விடயத்தில் பிரிகேடியர் பால்ராஜின் பெயர் தான் அதிகம் பேசப்படுகிறது. பால்ராஜே கட்டளைகளை வழங்குகிறார். கருணா எந்த இடத்திலும் இல்லையே..

தேர்தலில் வெற்றி பெற கருணா, வேறு ஒருவர் செய்ததை தான் செய்ததாக புள்ளிகளை போட்டுக்கொள்ள முயற்சிக்கின்றார் என்றே நான் நினைக்கின்றேன். புலிகளின் அனைத்து தலைவர்களும் இறந்து விட்டதால் சாட்சிக்கு எவரும் இல்லை என்பதே இதற்கு காரணம். தற்போது கருணா என்ன கூறினாலும் பதில் கூற எவருமில்லை. இதனால், கருணா, பாழடைந்த வீட்டில் சட்டி பாணைகளை உடைக்கின்றார்.

வேறு ஒருவருக்கு கிடைக்க வேண்டிய புகழை தான் செய்ததாக கூற முயற்சிப்பது என்பது கொரோனா போன்று அருகில் இருந்தாலும் பரவும் தொற்று நோய் போன்றதாக இருக்கும் என எண்ணுகிறேன் என சன்ன கருணாரத்ன குறிப்பிட்டுள்ளார்.