சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தில் விசேட நிகழ்வு

ஜூன் 21 – சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இன்று (28.06.2020) கிளிநொச்சி மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தில் விசேட நிகழ்வுகள் இடம்பெற்றன.

6 ஆவது சர்வதேச யோகா தினத்தை கடந்த 24 ஆம் திகதி யாழ்.இந்தியத் துணைத் தூதரகம், வட மாகாண கல்வி அமைச்சு மற்றும் தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்கா தேவி தேவஸ்தான மகளிர் இல்லத்துடன் இணைந்து நடத்தியதைத் தொடர்ந்து இன்று கிளிநொச்சி மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்திலும் கொண்டாடியது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் செய்தி மற்றும் ‘ ஸ்பிரிட் ஓப் யோகா ‘ என்ற காணொளியுடன் நிகழ்வு ஆரம்பமாகியது.
மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத் தலைவர் பொன். நித்தியானந்தம் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் இந்தியத் துணைத்தூதுவர் எஸ்.பாலச்சந்திரன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையா ற்றினார்.

அதனைத் தொடர்ந்து யோகா பயிற்றுனர் சூரியகுமார்; யோகாசன பயிற்சிகளை வழிநடத்த, இல்லத்தில் இருந்து 50 மாணவர்களும் இல்லத்தின் பணியாளர்களும் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து நிகழ்வில் பங்குபெற்று சிறப்பித்தனர்.

இந்தியத் துணைத் தூதரகத்தின் சார்பில் நடத்தப்பட்ட யோகா சம்பந்தமான கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற சிறுவர் இல்ல மாணவர்களுக்கு பணப் பரிசில்கள் வழங்கப்பட்டன :
கட்டுரைப் போட்டி
ச.பிரசன்னா முதலாவது பரிசு – 4,000 ரூபாய்
சி.பிரியனி இரண்டாவது பரிசு – 2,000 ரூபாய்
ம.தர்சினி மூன்றாவது பரிசு – 1,500 ரூபாய்

மேற்படி போட்டிகளில் பங்குபெற்ற ஏனைய அனைவருக்கும் ஆறுதல் பரிசாக தலா 1,000 ரூபாய் பணப்பரிசாக வழங்கப்பட்டது.