25,000 கோடி வீண் செலவு; வருகிறது மற்றுமொரு ஆபத்து! மிலிந்தவின் அறிவிப்பு

மாகாணசபைகளை ஒழிப்பது பற்றி அரசியல் கட்சிகள் தீவிரமாக சிந்திக்க வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார் முன்னாள் அமைச்சரும் ஜனாதிபதி கோட்டாபயவின் மிக முக்கிய பதவியில் இருப்பவருமான மிலிந்த மொரகொட. வருடாந்தம் 25,000 கோடியை மாகாணசபைகளிற்காக செலவிடுவதாகவும் தெரிவித்துள்ளார்.

13வது திருத்தத்தை ஒழிப்பதன் மூலம் மாகாணசபை முறைமையை ஒழிக்கலாம். இதை தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்குவது குறித்து அரசியல் கட்சிகள் தீவிரமாக சிந்திக்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையில் இனப்பிரச்சனையை தீர்க்கும் நோக்கத்துடன், 1987 ஆம் ஆண்டு மாகாணங்களிற்கு மேலதிக அதிகாரங்களை வழங்கும் நோக்கத்துடன் 13வது திருத்தம் உருவாக்கப்பட்டது. ஆனால் அது மிகையான, சுமையான, அதி செலவான, பயனற்றதாக மாறிவிட்டது.

மாகாண சபைகளை ஒழித்த பின்னர், உள்ளாட்சி அதிகாரிகளை வலுப்படுத்த முடியும். மாநகர சபைகள், நகர சபைகள் மற்றும் பிரதேச சபைகள் ஆகியவற்றை மக்களின் அன்றாட தேவைகளுக்கு உதவும் நெருக்கமான நிர்வாக கட்டமைப்புகளாக பராமரிக்கப்படலாம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாகாண சபைகள் ஒழிக்கப்பட்டு செனட் அமைப்பாக மாற்றப்பட்டால், அவை பிளவுகளை அகற்ற ஒரு நிபுணர் குழுவாக செயல்படும் என்று அவர் மேலும் கூறினார்.

மாகாண சபைகள் கலைக்கப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாகி, மாகாணசபைகள் செயலற்ற நிலையில் உள்ளதை சுட்டிக்காட்டினார்.

சபரகமுவ (26 செப்டம்பர் 2018), கிழக்கு (30 செப்டம்பர் 2018), வட மத்திய (1 ஒக்டோபர் 2018), மத்திய (08 அக்டோபர் 2018), வடமேற்கு (10 ஒக்டோபர் 2018), வடக்கு (25 ஒக்டோபர் 2018), தெற்கு (ஏப்ரல் 10, 2019), மேற்கு (ஏப்ரல் 21, 2019) மற்றும் ஊவா (செப்டம்பர் 08, 2019) ஆகியனவற்றின் ஆட்சிக்காலம் முடிந்த பின்னரும், உள்ளூராட்சி கட்டமைப்பில் அந்த மாகாணங்கள் வீண் செலவுகளின்றி இயங்குவதை சுட்டிக்காட்டியுள்ளார்.

மாகாணசபை முறைமை வடக்கு கிழக்கிற்கே அடிப்படைத் தேவையாக அறிமுகப்படுத்தப் பட்டது ஏனைய மாகாணங்களிற்கு பின்னர் இது இணைக்கப் பட்டதே நடைமுறை.

மிலிந்த குறிப்பிடுவது போல் மாகாணசபை முறைமை நீக்கப் பட்டால் வடக்கு – கிழக்கு மக்களிற்கே பேராபத்து என்பது மட்டும் உண்மை.

மிலிந்த மொரகொடவின் கூற்று நுாறு வீதம் சாத்தியப்படலாம் எனக் தென்னிலங்கையில் கூறப்படுகிறது.