இராணுவ வீரரின் மனைவிக்கு தொந்தரவு கொடுத்த பிக்கு! தாக்கி மரத்தில் கட்டி வைத்த உறவினர்கள்

அனுராதபுரம் – கஹட்டகஸ்திகிலிய,வஹாகஹாபுவெவ பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றின் விகாராதிபதியை பொல்லுகளால் தாக்கி, காயங்களை ஏற்படுத்தி மரத்தில் கட்டி வைத்த சம்பவம் தொடர்பாக இராணுவ சிப்பாய் ஒருவரின் உறவினர்களை பொலிஸார் இன்று சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

கஹட்டகஸ்திகிலிய பொலிஸாருக்கு நேற்று கிடைத்த முறைப்பாடு ஒன்றுக்கு அமைய மூன்று சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தனிப்பட்ட பிரச்சினையை அடிப்படையாக கொண்டு பிக்கு மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தாக்குதலில் காயமடைந்த எப்பாவள ரதனசிறி தேரரை பிரதேசவாசிகள் இணைந்து 1990 அம்பியூலன்ஸ் மூலம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளதுடன் அவர் அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

வஹாகஹாபுவவெவ, கஹட்டகஸ்திகிலிய,திருகோணமலை வீதி பிரதேசத்தை சேர்ந்த 62,34 மற்றும் 32 வயதான சந்தேக நபர்களே இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான தேரர், இராணுவத்தில் பணிப்புரியும் தமது உறவினரின் மனைவிக்கு அவ்வப்போது தொந்தரவு கொடுத்து வந்துள்ளதாகவும் தமது கௌரவத்தை பாதுகாத்துக்கொண்டு விகாரையில் இருக்குமாறு தேரருக்கு பல முறை ஆலோசனை வழங்கிய போதிலும் அவர் நேற்று முன்தினம் மாலை எல்லை மீறியதால், அவரை தாக்கியதாக சந்தேக நபர்கள் பொலிஸாரிடம் கூறியுள்ளனர்.

சந்தேக நபர்கள் இன்று அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர். சந்தேக நபர்கள் நடத்திய தாக்குதல் குறித்து பொலிஸார் விரிவான விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like