நீ இந்த நாற்காலியில் அமர்வதற்கு காரணம் நானே! கோட்டாபயவுக்கு கடும் தொனியில் எச்சரிக்கை; அம்பலத்திற்கு வந்த உண்மைகள்

எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் அதிகாரத்தை தான் கையில் எடுக்க போவதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கூறியுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாவட்டத்தில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஒருவரை இடமாற்றம் செய்வது தொடர்பாக கலந்துரையாடலின் போதே மகிந்த இதனை கூறியதாகவும் பொன்சேகா குறிப்பட்டுள்ளார். கம்பஹாவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

கொழும்பு மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையம் ஒன்றின் பொறுப்பதிகாரியை இடமாற்றம் செய்யுமாறு கோட்டாபய ராஜபக்ச உத்தரவிட்டார். இதனையடுத்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் அந்த இடமாற்றத்தை செய்தார். அவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நாமல் ராஜபக்சவின் நண்பர்.

நாமல் ராஜபக்ச இரவு நேர களியாட்ட விடுதிகளுக்கு செல்லும் போது அவருக்கு பாதுகாப்புக்காக செல்லும் நபர். தன்னை இடமாற்றம் செய்துள்ளதாக பொலிஸ் அதிகாரி, நாமலிடம் கூறியுள்ளார். நாமல் அதனை தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார். தந்தை, பாதுகாப்புச் செயலாளருக்கு கூறி இடமாற்றத்தை இரத்துச் செய்தார். எனினும் இடமாற்றத்தை அமுலாக்கி ஆக வேண்டும் என கோட்டாபய மீண்டும் கூறியுள்ளார்.

பாதுகாப்புச் செயலாளர் அதனை அமுல்படுத்தினார். நாமல் மீண்டும் தந்தையிடம் கூறியுள்ளார். அவர் நேரடியாக ஜனாதிபதி செயலகத்திற்கு சென்றுள்ளார். மறுபுறம் பாதுகாப்புச் செயலாளரும் அங்கு வந்திருந்தார். முதலில் பாதுகாப்புச் செயலாளரிடம் சென்ற மஹிந்த, முதலில் எங்களுக்கு தேவையான வகையில் வேலை செய்ய தெரிந்துகொள் என தெரிவித்துள்ளார்.

இல்லாவிட்டால், கன்னத்தை உடைப்பேன் என்றும் எச்சரித்துள்ளார். பாதுகாப்புச் செயலாளர் நடுங்க ஆரம்பித்து விட்டார். அடுத்ததாக ஜனாதிபதி கோட்டாபயவிடம் சென்றுள்ளார். ஜனாதிபதி தலையை குனிந்து கொண்டிருந்தார்.

அங்கு சென்ற மஹிந்த நீ அந்த நாற்காலியில் அமர்ந்திருப்பதற்கு நானே காரணம் என கூறியுள்ளார். இது முற்றிலும் உண்மை. மகிந்த ராஜபக்ச மற்றும் அவருடன் இருப்பவர்களே கோட்டாபயவை ஜனாதிபதி நாற்காலியில் அமர வைத்தனர்.

பொதுத் தேர்தல் வரை காத்திரு, உனது வியத் மக ஆட்களை நான் உதைத்து விரட்டுவேன் என பிரதமர், ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் உனது இராணுவக் குழுவையும் விரட்டி விடுவேன் என்று எச்சரித்துள்ளார். தேர்தலுக்கு பின்னர் நானே நாட்டை ஆட்சி செய்வேன், நீ பொம்மை போல இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதுதான் எதிர்காலத்தில் நடக்கும். அரசியலமைப்புச் சட்டத்திலும் அதிகமான அதிகாரங்கள் பிரதமருக்கே இருக்கின்றன என்பதே இதற்கு காரணம். மகிந்த ராஜபக்ச கட்டாயம், கோட்டாபய ராஜபக்சவை ஒரு பொம்மை போல் வைத்திருப்பார்.

அதன் பிறகு மகிந்த ராஜபக்ச மீண்டும் நாட்டை ஆட்சி செய்வார். அப்போது மீண்டும் எமது நாடு 2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதிக்கு முன்னர் இருந்த நிலைமைக்கு செல்லும் எனவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like