முக கவசம் அணிந்து பேசுமாறு கூறிய பெண் ஊழியரின் தலைமுடியை இழுத்து இரும்பு கம்பியால் கொடூரமாக தாக்கிய அதிகாரி!

முக கவசம் அணிந்து பேசுமாறு கூறிய பெண் ஊழியரின் தலைமுடியை இழுத்து இரும்பு ராடால் சரமாரி தாக்கிய மேலாளரை பணி நீக்கம் செய்து சுற்றுலாத்துறை நிர்வாக இயக்குனர் உத்தரவிட்டார்.

ஆந்திராவின், நெல்லூரில் சுற்றுலாத்துறை ஓட்டல் மற்றும் மண்டல அலுவலகம் உள்ளது. இங்கு ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வருபவர் உஷாராணி, மாற்றுத்திறனாளி. இவர் கடந்த 2 தினங்களுக்கு முன் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, அதே அலுவலகத்தில் மேலாளர் பாஸ்கர்ராவ், முகக்கவசம் அணியாமல் அங்கு வந்தார். இதைக்கண்ட உஷாராணி ‘தற்போது கொரோனா நோய் வேகமாக பரவி வருகிறது.

ஆகையால், தாங்கள் முகக்கவசம் அணிந்துக்கொண்டு பேசுங்கள்’ என தெரிவித்தார். இதனால், ஆத்திரமடைந்த பாஸ்கர்ராவ், உஷாராணியை கீழே தள்ளி தலைமுடியை பிடித்து இரும்பு ராடால் சரமாரியாக தாக்கினாராம்.

இதைக்கண்ட சக ஊழியர்கள் பாஸ்கர்ராவை தடுக்க முயன்றும் முடியவில்லை. தொடர்ந்து உஷாராணியை சரமாரியாக அடித்தார்.

இதனால், ஊழியர்கள் அலறியடித்து கொண்டு ஓடினர். இதுகுறித்து உஷாராணி தர்காமிட்டா போலீஸ் நிலையத்தில் சிசிடிவி கமரா காட்சிகளின் பதிவுகளை ஆதாரமாக வைத்து நேற்று புகார் அளித்தார்.

அதன்பேரில், பாஸ்கர்ராவ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் சுற்றுலாத்துறை நிர்வாக இயக்குனர் பரவீன்குமார், மேலாளர் பாஸ்கர்ராவை தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.