தமிழர்களின் வரலாற்று சிறப்புமிக்க கதிர்காம உற்சவம் தொடர்பில் முக்கிய தீர்மானம்

வரலாற்று சிறப்புமிக்க கதிர்காம கந்தனின் புனித திருத்தலத்தின் வருடாந்த ஆடி வேல் விழா எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இந்த நிலையில் கொவிட் தொற்று ஒழிப்புக்கு ஒத்துழைப்பு வழங்கி, சுகாதார பிரிவின் வழிகாட்டி ஆலோசனைகளுக்கு அமைவாக மத அனுஷ்டானங்களுக்கு மாத்திரம் முக்கியத்துவம் வழங்கி இம்முறை கதிர்காமம் புனித திருத்தலத்தின் வருடாந்த உற்சவத்தினை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இம்முறை ஆடி வேல் விழாவை முன்னிட்ட பெரேஹர வைபவம் நடைபெறும் கால எல்லை முழுமையாக பொது மக்களுக்கு மத நடவடிக்கைகளுக்களில் கலந்துகொள்வதற்கோ அல்லது பார்வையிடுவதற்கோ சந்தர்ப்பம் கிட்டாது.

அதேபோன்று வடக்கு கிழக்கிலிருந்து உகந்தை குமண – யால வனத்தினூடாக கதிர்காமம் புனித பூமிக்கு பாத யாத்திரையாக செல்வோருக்கு தேவையான வசதிகள் செய்யப்படமாட்டாது என்றும் இதில் கலந்துகொள்வோருக்கு அனுமதி வழங்குவதில்லை என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக பொதுமக்களின் நலனைக் கருத்திற்கொண்டு சுகாதார பிரிவினரின் முழுமையான ஆலோசனையின் அடிப்படையில் கதிர்காமம் புனித திருத்தலத்தின் வருடாந்த ஆடி வேல் விழா நடைபெறும் என தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் அக்கால எல்லைக்குள் கதிர்காம புனித நகரத்திற்குள் பொது மக்கள் வருவதற்கு அனுமதி வழங்காதிருப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும், மொனராகலை மாவட்ட செயலாளர் அறிவித்துள்ளார்.