யாழ் பேஸ்புக் காதலனால்… சிக்கிய 36 வயது குடும்பப் பெண்

பேஸ்புக் மூலம் அறிமுகமான யாழ்ப்பாண இளைஞனிற்கு பணம் வழங்குவதற்காக, தனது சகோதரியின் நகைகளை திருடி 6,20,000 ரூபாவிற்கு விற்பனை செய்த 36 வயதான பெண்ண கம்பளை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கம்பளை நகர் பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவரே கைதாகியுள்ளார். கூட்டு குடும்பமாக வாழும் குடும்பமொன்றின் மூத்த சகோதரனின் மனைவியான குறித்த பெண்ணுக்கு, சில காலத்தின் முன்னர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவருடன் பேஸ்புக் மூலம் அறிமுகம் கிடைத்தது.

நீண்ட உரையாடல், நாளடைவில் காதலாக மாறியது.

இருவரும் மிக நெருக்கமாக பேஸ்புக்கில் பழகி வந்த நிலையில், யாழ்ப்பாண இளைஞன் தனக்கு அவசரமாக பணம் தேவைப்படுவதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, கணவனின் தம்பியின் மனைவியின் அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த 10 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளை திருடி, தனது நண்பியுடன் இணைந்து கெலிஓயாவிலுள்ள நகைக்கடை ஒன்றில் விற்பனை செய்துள்ளார். 6,20,000 ரூபாவிற்கு நகைகள் விற்கப்பட்டது.

இதில், முதற்கட்டமாக ஈ காஷ் மூலம் 90,000 ரூபாவை யாழ் இளைஞனிற்கு அனுப்பி வைத்துள்ளார்.

நகைகள் காணாமல் போனதையடுத்து, கம்பளை பொலிசாரிடம் முறைப்பாட செய்யப்பட்டது. பொலிசார் முன்னெடுத்த விசாரணையில், கைதான 36 வயது பெண்ணின் நண்பியிடம் இருந்த நகை விற்பனை செய்யப்பட்ட பற்றுச்சீட்டு மீட்கப்பட்டது.

அதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், பிரதான சந்தேகநபரான குடும்பப் பெண் கைதானார்.

பேஸ்புக் காதலனிற்காக, தனது கணவனின் தம்பியின் மனைவியின் நகைகளையே திருடி விற்பனை செய்த 36 வயது பெண்ணும், நண்பியும் கம்பளை பொலிசாரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதுடன், இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.