சென். பீற்றர்ஸ் தேவாலய படுகொலையின் 25ஆவது நினைவேந்தல்

நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மீதான விமான தாக்குதலின் 25ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்றைய தினம் வியாழக்கிழமை மாலை தேவாலயத்தில் நினைவுகூரப்பட்டது.

சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் இன்று மாலை பங்குத்தந்தை தலைமையில் வழிபாடுகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து தேவாலயத்திற்கு அருகில் அமைக்கப்பட்டு உள்ள நினைவுத் தூபியில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மலர் தூபி சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.

நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவு தூபியில் அஞ்சலி செலுத்த பொலிஸார் தடைகளை ஏற்படுத்திய போதிலும் அதனையும் மீறி மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

1995ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9 திகதியன்று நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயத்திலும் நவாலி ஸ்ரீ கதிர்காம முருகன் ஆலயத்திலும் இடம்பெயர்ந்து தங்கியிருந்த மக்கள் மீது விமானப் படையினரின் புக்கார விமானங்கள் தொடர்ச்சியாக 13 குண்டுகளை வீசியதில் 147 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

அன்று அதிகாலை வலிகாமம் பிரதேசங்களை நோக்கி எறிகணை தாக்குதல் ,விமான தாக்குதல்களின் உதவியுடன் இராணுவத்தினர் முன்னேறிப் பாய்தல் (Leap forward ) எனும் இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டனர்.

தொடர் எறிகணை தாக்குதல்களால் தமது வாழ்விடங்களை விட்டு நவாலியை நோக்கி இடம்பெயர்ந்த மக்கள் நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயத்திலும் நவாலி ஸ்ரீ கதிர்காம முருகன் ஆலயத்திலும் தஞ்சமடைந்தனர்.

அன்றைய முற்பகல் திடீரென வந்த மூன்று விமானங்கள் தொடர்ச்சியாக 13 குண்டுகளை மக்கள் தஞ்சமடைந்திருந்த தேவாலயம் மற்றும் ஆலயம் மீது வீசின.

இந்தக் குண்டு வீச்சு சம்பவத்தில் குழந்தைகள் பெண்கள் உள்பட 147 பேர் அந்த இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். 350க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருந்தனர்.

அன்றைய தினம் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக தேவாலயத்திற்கு அருகில் நினைவு தூபி அமைக்கப்பட்டுள்ளது. அந்தத் தூபியில் அஞ்சலி செலுத்துவதற்காக பொலிஸார் தடை ஏற்படுத்தி இருந்தனர்.

பின்னர் அருட்தந்தையர்கள் மட்டும் சுடரேற்றி அஞ்சலி செலுத்த பொலிஸார் அனுமதித்தனர். அதனை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த பொலிசார் அனுமதிவில்லை.

அதேவேளை பொலிஸாரின் தடைகளை மீறி மக்களை சுடரேற்றி அஞ்சலி செலுத்திக்கொண்டு இருந்த வேளை அவ்விடத்தில் ஏற்பட்ட குழப்ப நிலையை அடுத்து அவ்விடத்திற்கு துப்பாக்கிகளுடன் பத்திற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் விரைந்து பொதுமக்கள் மத்தியில் அவர்களை அச்சுறுத்தும் விதமாக செயற்பட்டனர்.

இன்றைய நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என மானிப்பாய் பொலிசார் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் தடையுத்தரவு கோரிக்கையை முன் வைத்த போதிலும் நீதிமன்றம் அதற்கு தடை விதிக்க மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.