முள்ளிவாய்க்கால் அஞ்சலி நிகழ்வு! யாழ்.பல்கலைக்கழக மாணவர்களை தொலைபேசியில் இயக்குவது யார்??

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை குழப்பும் விதமாக செயற்பட்டு வரும் யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்கள் இன்றையதினம் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியிருந்தனர்.

இந்த கலந்துரையாடல் முன்னதாக யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் நடப்பதென தீர்மானிக்கப்பட்டிருந்த போதும், இந்தவிதமான குழப்ப முயற்சிகளிற்கு பல்கலைகழகத்தில் இடமளித்தால் வீணாண விமர்சனங்களை சந்திக்க வேண்டிவருமென கூறி, பல்கலைகழக நிர்வாகம் அதற்கான அனுமதியை மறுத்து விட்டது. இதையடுத்து திருநெல்வேலியிலுள்ள தனியார் விடுதியொன்றில்- பணம் செலுத்தி – கலந்துரையாடல் நடத்தப்பட்டது.

இதில் பல்கலைகழக மாணவர்களுடன் தொடர்புடைய சிலர் மாத்திரமே கலந்து கொண்டிருந்தனர். இந்த கலந்துரையாடலின் முடிவில்- பல்கலைகழக மாணவர்கள் தலைமையிலேயே நினைவேந்தல் நடத்துவதென முடிவு செய்துள்ளனர். தமது தலைமையில் நடக்கும் நிகழ்வில் முதலமைச்சர் சுடரேற்றலாம், மற்ற அனைவரும் கலந்து கொள்ளலாமென தீர்மானித்துள்ளனர்.

இந்த சந்திப்பின் போது, மாணவர் ஒன்றிய தலைவர் கிருஷ்ணமீனன் அடிக்கடி தொலைபேசியில் ஆலோசனை கேட்டபடியிருந்தார். தொலைபேசியில் ஆலோசனை பெற்றே, இந்த கலந்துரையாடலை நடத்தினார்.

இதற்கு முன்னர் அரசியல்கைதிகள் விவகாரத்தில் பல்கலைகழக மாணவர்கள் நடத்திய போராட்டங்களிற்கான கலந்துரையாடலிலும் இதேவிதமான சம்பவங்கள் நடந்திருந்தன.

கூட்டத்தில் ஒரு முடிவெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது, மாணவர் ஒன்றிய தலைவருக்கு திடீரென வரும் தொலைபேசி அழைப்பையடுத்து அவர் வெளியில் சென்று பேசிவிட்டு, மீண்டும் கூட்டத்திற்கு வந்து, ஏற்கனவே எடுத்த முடிவிற்கு மாறாக கதைக்க- அதனால் குழப்பங்கள் ஏற்பட்டிருந்தன.

இது குறித்து அப்பொழுதே- கூட்டத்திலேயே- சிவில் பிரதிநிதிகள் அதிருப்தி வெளியிட்டிருந்தனர்.

அவுஸ்திரேலிய தலைமை செயலக நிதி பின்னணியில் மாணவர் ஒன்றிய தலைவர் இயங்க ஆரம்பித்த விவகாரத்தை அப்போதைய சந்திப்பில் கலந்து கொண்ட பலர் தொடர்பு கொண்டு இந்த விவகாரத்தை தெரியப்படுத்தினர்.

அதேவேளை முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை குழப்பமில்லாமல் நடத்தி முடிப்பதற்காக முயற்சித்துக் கொண்டிருக்கும் புலிகளின் மூத்த உறுப்பினர் பஷீர் காக்கா, ரூபன், யோகன் பாதர் ஆகியோர் நாளை முதலமைச்சரை சந்திக்கின்றனர். பல்கலைகழக மாணவர் பிரதிநிதிகளையும் நாளை முதலமைச்சர் சந்திக்கலாமென தெரிகிறது.

நேற்றையதினம் பல்கலைகழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளை பஷீர் காக்கா குழுவினர் சந்தித்த போது, மாணவர்களின் நடவடிக்கைகள் தொடர்பான கடுமையான அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

குறிப்பாக, வடமாகாணசபை நிகழ்வை நடத்தினால் குழப்பம் வரலாமென பல்கலைகழக மாணவர்கள் அறிக்கை விட்டது, மக்களை அவமதிக்கும் விதமான கருத்து என்பதை சுட்டிக்காட்டினர்.

உணர்வுபூர்வமான நினைவஞ்சலியில் மக்கள் குழப்பம் விளைவிக்க மாட்டார்கள், கடந்தமுறை சிலர் கட்சிகளால் தூண்டப்பட்டு குழப்பம் விளைவித்தனரே தவிர, அது மக்களின் குழப்பமாக எடுத்துக் கொள்ள முடியாதென புரிய வைத்தனர்.

பஷீர் காக்கா அணியினர் நாளை முதலமைச்சரை சந்திக்கலாமென சொல்லப்பட்டிருந்தாலும், இன்னும் முதலமைச்சரிடம் இருந்து சந்திப்பிற்கான நேரம் ஒதுக்கிக் கொடுக்கப்படவில்லை.

இன்று இரவு, அல்லது நாளை காலையில் தான் அந்த தகவல் வழங்கப்படும் என தெரிகிறது. அமைச்சர் அனந்தி சசிதரன் இந்த சந்திப்பிற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்.

இதேவேளை, பல்கலைகழக மாணவர்கள் தலைமை தாங்க அனுமதிப்பது, தாயக அரசியலை பணத்தின் மூலம் கட்டுப்படுத்த முனையும் புலம்பெயர் அமைப்புக்கள் சிலவற்றின் கையில் கொடுப்பதாக முடியும்.

இதனால், பல்கலைகழக மாணவர்களின் நிலைப்பாட்டை நாளை முதலமைச்சர் ஏற்றுக்கொள்ள வாய்ப்பில்லையென அறிய வருகிறது.

தமது தலைமையை வடமாகாணசபை ஏற்றுக் கொள்ளாத பட்சத்தில், தனியான அஞ்சலி நிகழ்வை நடத்துவதென பல்கலைகழக மாணவர்கள் முடிவெடுத்துள்ளனர்.

பல்கலைகழக மாணவர்களிற்கும், வடமாகாணசபைக்கும் உடன்பாடு எட்டப்படாதவிடத்து, இந்த இரண்டு தரப்பையும் தவிர்த்து, தனியான அஞ்சலி நிகழ்வை நடத்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி தீர்மானித்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி மே 18ம் திகதி காலையில் வடமாகாணசபை அஞ்சலி நிகழ்வும், பின்னர் பல்கலைகழக மாணவர் அஞ்சலி நிகழ்வும், பின்னர் தமிழ் தேசிய மக்கள் முன்னணி அஞ்சலி நிகழ்வும் நடக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like