வாகன சாரதிகளுக்கு அதிமுக்கிய அறிவிப்பு! இன்று முதல் கடுமையாக அமுலுக்கு வரும் தடை

வாகனம் நிறுத்த தடை செய்யப்பட்டுள்ள பகுதிகள் மற்றும் நடைபாதைகளில் வாகனங்களை நிறுத்துவது இன்று முதல் கடுமையாக தடை செய்யப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தடையை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

வீதிகளில் வாகனங்களை நிறுத்த அனுமதியற்ற இடங்கள் மற்றும் நடைபாதைகளில் வாகனங்களை நிறுத்தி வைப்பவர்களை தேடி இன்று முதல் விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

குறித்த இடங்களில் வாகனங்களை நிறுத்துவதன் காரணமாக அநேகமான வீதி விபத்துகள் இடம்பெறுகின்றன.

எனவே வாகனம் நிறுத்தத் தடை என்ற அறிவிப்பு வைக்கப்பட்டுள்ள இடங்கள் மற்றும் நடைபாதைகளில் வாகனங்கள் நிறுத்துவதை தவிர்க்க வேண்டும் என வாகன சாரதிகளிடம் அதிலும் குறிப்பாக மோட்டார் சைக்கிள் ஓட்டிகள் மற்றும் முச்சக்கரவண்டி சாரதிகளிடம் கேட்டுக் கொள்கிறோம்.

இதனை மீறி குறித்த பகுதிகளில் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தால் அந்த வாகனங்கள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்படும் அதேவேளை இதற்கான செலவுகளை வாகன உரிமையாளரே செலுத்த வேண்டும்.

அத்துடன், இந்த விதியை மீறுபவர்களுக்கு எதிராக மோட்டார் வாகன கட்டளைச் சட்டத்துக்கமையவும், தேசிய வீதிகள் சட்டத்துக்கமையவும் வழக்கு தாக்கல் செய்யப்படும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.