இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மற்றும் செயலாளருக்கு எதிராக கட்சி உறுப்பினரால் தொடரப்பட்ட வழக்கு திருகோணமலை நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
திருகோணமலை – பட்டணமும் சூழலுக்குரிய பிரதேச சபை தமிழரசு கட்சி உறுப்பினர் ஒழுக்காற்று நடவடிக்கை காரணமாக பிரதேச சபை உறுப்பினர் மற்றும் கட்சி உறுப்புரிமை அனைத்திலிருந்தும் விலக்கப்பட்டு தேர்தல் ஆணையம் மூலம் வர்த்தமானி பிரசுரமும் செய்யப்பட்டிருந்தனர்.
இவ்விலக்கலுக்கு எதிராக குறித்த தமிழரசுக் கட்சியின் உறுப்பினர், தமிழரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் செயலாளருக்கு எதிராக திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் ஆணை வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.
ஜனாதிபதி தேர்தல் காலகட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவின் கூட்டத்தில் அவருக்கு கைலாகு கொடுத்ததனால் தன்னைக் கட்சியிலிருந்து நீக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டத்தாக மனுதாரர் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த நீதிபதி, தேர்தல் ஆணைக்குழு ஆணையாளர் நாயகம், அவரின் கட்டளையின் பிரகாரம் கடமை ஆற்றும் திருகோணமலை உதவித் தேர்தல் ஆணையாளர் அவர்களினால் பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு என்பன மத்திய அரசாங்கத்தின் வரம்பெல்லைக்கு உட்பட்டது எனத் தெரிவித்திருந்தார்.
மேலும் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் செயலாளர் துரைராஜசிங்கத்திற்கு அழைப்பாணை பிறப்பிக்க வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை நீதிபதி நிராகரித்து தேர்தல் ஆணையத்தை விசாரணை செய்யும் அதிகாரம் மாகாண மேல் நீதிமன்றிற்கு கிடையாது என தெரிவித்து தமிழரசுக் கட்சியின் தலைவர் மற்றும் செயலாளருக்கு அழைப்பாணை அனுப்பித்து வழக்கினை தள்ளுபடி செய்துள்ளார்.