குறைந்த வருமானம் பெறுவோருக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்ட மஹிந்த

குறைந்த வருமானம் பெறும் ஒரு இலட்சம் குடும்ப உறுப்பினர்களுக்கு தொழில்வாய்ப்புகள் வழங்கும் திட்டம் தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஆரம்பிக்கப்படுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

ஒரு இலட்சம் தொழில்வாய்ப்பு மற்றும் பட்டதாரிகளுக்கு அரச நியமனம் என்பன தேர்தல் ஆணைக்குழுத் தலைவரின் ஆலோசனைக்கமைய தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. தேர்தலின் பின்னர் அதனை தொடர்ந்து முன்னெடுப்பதில் எந்தத் தடையும் கிடையாதென்றும் அவர் குறிப்பிட்டார்.

பொதுஜன பெரமுன சார்பில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற பிரசார கூட்டத்தில் உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

எதிர்வரும் காலத்தில் உருவாக்கப்படும் பொதுஜன பெரமுன அரசு நாட்டின் விவசாயத்துறை முன்னேற்றம் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தும்.

விவசாயத்துறையில் நவீன முறைகளை அறிமுகம் செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.விவசாய காப்புறுதி மற்றும் விவசாய ஓய்வூதிய காப்புறுதி என்பவற்றை மேலும் பலப்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாக கூறிய பிரதமர்,

பால் உற்பத்தி கைத்தொழிலுக்கு புதிய தொழில்நுட்பமொன்றை அறிமுகம் செய்ய உள்ளதாகவும் கூறினார்.

கந்தளாய் சீனி தொழிற்சாலைக்கு துரிதமாக முதலீட்டாளர் ஒருவரை அழைத்துவர உள்ளதாகவும் முடியாவிட்டால் அரச தலையீட்டிலாவது அதனை முன்னெடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.