11,12,13ஆம் தரங்களுக்கு ஜூலை 27 காலை 7.30 மணிக்கு பாடசாலைகள் ஆரம்பம்

அனைத்து அரச பாடசாலைகளிலும் 11, 12 மற்றும் 13 தரங்களில் பயிலும் மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் வரும் 27ஆம் திகதி திங்கட்கிழமை காலை 7.30 மணிக்கு ஆரம்பிக்கும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அத்தோடு பாடசாலை காலை 7.30 மணி தொடக்கம் பிற்பகல் 3.30 மணிவரை இடம்பெறும் என்றும் கல்வி அமைச்சுக் குறிப்பிட்டுள்ளது.

இதுதொடர்பில் கல்வி அமைச்சு இன்று விடுத்துள்ள சிறப்பு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

கோவிட் – 19 வைரஸ் பரவுவது தொடர்பான புதிய முன்னேற்றங்களைக் கருத்தில் கொண்டு பாடசாலை தொடக்க நாள்கள் மற்றும் பாடசாலை தரங்கள் மற்றும் பரீட்சை திகதிகள் திருத்தப்பட்டுள்ளன.

அதன்படி 11, 12 மற்றும் 13 ஆம் வகுப்புகள் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை நடைபெறும். பிற தரங்களுக்கான கல்வி நடவடிக்கைகள் ஓகஸ்ட் 10 ஆம் திகதி திறக்கப்படும்.

சுகாதார அதிகாரிகள் வழங்கிய வழிகாட்டுதல்களின்படி பாடசாலைகளை நடத்த வேண்டும் என்பதையும், மாணவர்களை பாடசாலைக்கு அழைத்து வருவதில் கல்வி அமைச்சு வழங்கிய சிறப்பு அறிவுறுத்தல்களின்படி நடத்தப்பட வேண்டும் என்பதும் அதிகாரிகளுக்கும் வலியுறுத்தப்படுகிறது.

2020 பொதுத் தேர்தலுக்காக பாடசாலைகளை தயார்படுத்த வசதியாக தேர்தலுக்குப் பயன்படுத்தப்படும் அனைத்து பாடசாலைகளின் அதிபர்களும் பிரதி அதிபர்களும் ஜூலை 28, 29, 30 மற்றும் 31 ஆகிய திகதிகளில் கடமையில் இருக்க வேண்டும்.

இந்த காலகட்டத்தில் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளில் தலையிடக்கூடாது என்பதற்காக உதவித் தேர்தல் ஆணையர்களுடன் கலந்தாலோசித்து பாடசாலைகளில் தேர்தல் நடவடிக்கைகளை எளிதாக்குவதற்கு அதிபர்கள் மேலும் அறிவுறுத்தப்படுகிறார்கள் – என்றுள்ளது.