கொழும்பில் தப்பிச் சென்ற கொரோனா நோயாளி தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

கொழும்பு IDH வைத்தியசாலையில் இருந்து நேற்றைய தினம் தப்பி சென்ற கொரோனா நோயாளி தான் பயணித்த இடங்கள் தொடர்பில் போலி தகவல்களை வழங்கியுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த நோயாளி வைத்தியசாலையில் இருந்து தப்பி செல்லும் போது தான் வைத்தியசாலையில் அணிந்திருந்த ஆடைகளை அகற்றியுள்ளார். செல்லும் வழியில் இருந்த வீடு ஒன்றுக்குள் பலவந்தமாக நுழைந்து அங்கிருந்த ஆடைகளை அணிந்துக் கொண்டுள்ளார். அத்துடன் அங்கிருந்த முச்சக்கர வண்டி ஒன்றையும் திருடியுள்ளார்.

அதில் அவர் கொழும்பு கோட்டை நோக்கி சென்றுள்ளதாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கொரோனா நோயாளி பயணித்ததாக முதலாவதாக வெளியிடப்பட்ட தகவல்கள் போலியானதென தெரியவந்துள்ளது. அவர் IDH வைத்தியசாலையில் இருந்து கொழும்பு கோட்டை வரை பயணித்த முறை தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதற்காக பாதுகாப்பு பிரிவினர் CCTV மற்றும் வேறு சாட்சியாளர்கள் ஊடாக விரைவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த நபர் ஆடை மற்றும் சைக்கிள் திருடிய வீட்டை சுகாதார பிரிவினர் கிருமி நீக்கம் செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நோயாளி பொறுப்பற்ற முறையில் செயற்பட்டமையினால் அவருக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குறித்த நோயாளியின் செயற்பாடு காரணமாக கொழும்பில் சமூக மட்டத்தில் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.