யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையின் புதிய அதிபராக திருமதி ரஜினி முத்துக்குமரன் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த நியமனத்திற்கு ஆசிரியர் சங்கங்கள் போர்க்கொடி தூக்கியுள்ளன.
நேற்றையதினம் திருமதி ரஜினி முத்துக்குமரன் தமது கடமைகளை பொறுப்பேற்ற நிலையில், தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவரின் இந்த நியமனம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வேம்படி மகளிர் உயர்தர பாடசாலையின் அதிபராக ரஜினி முத்துக்குமரன் ஏற்கனவே நியமிக்கப்பட்டிருந்தார். அது அரசியல் நியமனமாக ஒரு தரப்பினால் எதிர்க்கப்பட்டது.
அதன்பின்னர், கல்வியமைச்சினால் பிறிதொரு அதிபர் நியமிக்கப்பட்டார். எனினும், இரண்டு அதிபர்களும் கடமையிலிருந்ததால், புதிய அதிபர் நீதிமன்றத்தை நாடினார்.
இதன்பின்னர், ரஜினி முத்துக்குமரன் வலயக்கல்வி பணிமனையில் இணைக்கப்பட்டார்.
பின்னர் பொறுப்பேற்ற அதிபர் பதவியில் இருந்து ஓய்வுபெற்றதையடுத்து, பாடசாலையின் அதிபர் பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டிருந்தது.
இந்த நிலையில், நேற்று ரஜினி முத்துக்குமரன் மீண்டும் அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் வழங்கப்படும் நியமனம் முறையற்றது என்றும், நேர்முகத் தேர்வு வைக்கப்படாமல் நியமனம் வழங்கப்பட்டதாகவும் ஆசிரியர் சங்கங்கள் குற்றம்சாட்டியுள்ளன.
அத்துடன் இது குறித்து, மாகாண கல்விப்பணிப்பாளருடன் ஆசிரிய சங்கங்களின் பிரதிநிதிகள் இன்று சந்தித்து பேசவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.






