யாழில் உயர் அதிகாரிகளின் கபடத்தனம் அம்பலம்!

யாழ். மாநகர சபையின் தீயணைப்பு இயந்திரத்தின் உண்மை பெறுமதி குறைத்து காப்புறுதி செய்யப்பட்டமையாலேயே அடுத்த கட்ட நடவடிக்கைக்கு செல்ல முடியாமல் உள்ளதாக மாநகர சபை உறுப்பினர் ந. லோகதயாளன் தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை யாழ்.மாநகர சபை மண்டபத்தில் இடம்பெற்ற மாதாந்த கூட்டத்திலேயே அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர்,

யாழ்ப்பாண மாநகர சபைக்கு 2014 ஆம் ஆண்டு 3 கோடியே 25 இலட்ச ரூபாவுக்கு புதிதாக வந்த வாகனம் வெறும் 60 இலட்சத்திற்கே காப்புரிமை செய்யப்பட்டுள்ளது.

தற்போது வாகனம் விபத்துக்குள்ளாகி முழுமையான சேதமடைந்துள்ளதால் அதனை திருத்த ஒரு கோடி தேவைப்படுகிறது.

இருப்பினும் காப்புறுதி நிறுவனம் குறித்த வாகனத்தின் முழுமையான காப்புறுதியை வழங்குமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. ஒரு தொகையை சபையின் பொறுப்பிலேயே செலவிடப்பட வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது.

குறைந்த தொகையில் காப்புரிமை செய்தமை ஆணையாளரின் முழுமையான தவறு. இந்த விடயத்திற்கு பொறுப்புக் கூறியாக வேண்டும்.

மக்களின் வரிப்பணம் வீணாவதற்கு அதிகாரிகளே காரணமாக இருந்துள்ளனரென அவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் மாநகர சபையின் கணக்காளர் இந்த விடயத்தில் எனது பொறுப்பு ஏதும் கிடையாதென தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள ஆணையாளர்,

ஏதோ தவறு நடந்திருப்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் அது என்னுடைய பிழையல்ல.

முதலில் 68 இலட்சம் ரூபா பெறுமதியில் காப்புரிமை செய்யப்பட்டிருந்தது அதையே நானும் செய்தேன். எனக்கு முன்பு இருந்த ஆணையாளர்கள் இதனைத்தான் செய்துள்ளார்களென தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் உடனடி விசாரணை செய்ய வேண்டுமென்ற பிரேரணையை உறுப்பினர்கள் முன்மொழிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது