அமெரிக்காவில் கொடூரமாக கொல்லப்பட்ட இந்திய செவிலியர்! அடக்கம் தொடர்பில் வெளியானதகவல்

அமெரிக்காவில் கணவரால் கொடூரமாக கொல்லப்பட்ட இந்திய செவிலியரின் உடல் இந்த வாரம் அங்கேயே நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் தாம்பா பகுதி கிறிஸ்தவ தேவாலயத்தில் அடக்கம் செய்ய முறைப்படியான நடவடிக்கைகள் துவங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கொல்லப்பட்ட செவிலியர் மெரின் ஜாயின் தந்தை வழி உறவினர்கள் உள்ளிட்ட சிலர் தாம்பா சுற்றுவட்டார பகுதிகளில் குடியிருப்பதாகவும், அவர்கள் செவிலியரின் இறுதிச்சடங்குகளை முன்னெடுத்து நடத்துவார்கள் எனவும் கூறப்படுகிறது.

தற்போதைய சூழலில் சடலத்தை இந்தியா கொண்டு செல்வது எளிதான விடயமல்ல என அதிகாரிகள் தரப்பு தெரிவித்ததை அடுத்தே, பெற்றோரின் ஒப்புதலுடன் அமெரிக்காவில் நல்லடக்கம் செய்ய உறவினர்கள் முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

செவிலியர் மெரினின் சடலம் தற்போது இறுதிச்சடங்குகளுக்கான இல்லம் ஒன்றில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இன்று உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் இறுதி அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்ய முடிவான நிலையில், காலநிலை காரணமாக அந்த முடிவும் கைவிடப்பட்டுள்ளது.

இருப்பினும், மெரின் பணியாற்றிய மருத்துவமனை ஊழியர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் வகையில் செவ்வாய்க்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சடலத்தை இந்தியா கொண்டு செல்ல முடியாத சூழ்நிலையை நேற்று மதியம், அமெரிக்காவில் இருந்து உறவினர்கள் மெரினின் பெற்றோருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

இதேவேளை இறுதியாக ஒருமுறை தங்கள் மகளை காண வேண்டும் என்ற ஆசையை அவர்கள் வெளிப்படுத்தியிருந்தாலும், தற்போதைய சூழலில் அது முடியாமல் போனது.

மட்டுமின்றி, உடலை பதப்படுத்தும் சிகிச்சைக்கு முயன்றும் முடியாமல் போனதே, ஒரு காரணமாக கூறப்படுகிறது.

குறித்த உடல் முழுவதும் 17 கத்திக்குத்து காயங்கள் மட்டுமின்றி, கார் ஏறி இறங்கியதால், மிக மோசமான நிலையில் உடல் இருப்பதால் உரிய சிகிச்சை மூலம் பதப்படுத்துவது சிரமம் என மருத்துவர்கள் தெரிவித்ததே, இந்தியாவுக்கு மெரினின் சடலத்தை கொண்டு செல்லும் முடிவை கைவிட்டதாகவும் கூறப்படுகிறது.