பொதுத் தேர்தலுக்கு பின்னர் நாட்டில் என்ன நடக்குமோ? அச்சத்தில் மக்கள்…

எதிர்வரும் புதன்கிழமை நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்குப் பின்னர் நாட்டில் என்ன நடக்கப்போகிறதோ என்பதே பலருக்கும் உள்ள கவலை.

நாட்டின் அரசியல், பொருளாதார, பாதுகாப்பு சூழலைக் கருத்தில் கொண்டு மாத்திரம், மக்கள் மத்தியில் இந்தக் கவலை தோன்றவில்லை. சுகாதார நிலைமையும் கூட, இந்தக் கவலைக்கு முக்கிய காரணம்.

கொரோனா தொற்று விடயத்தில் அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடன் இல்லை என்ற கருத்து, எதிர்கட்சி அரசியல்வாதிகளைப் போலவே பெரும்பாலான மக்களிடமும் உள்ளது.

தொற்று குறித்த அச்சுறுத்தலையும் அதுபற்றிய தரவுகளையும் அரசாங்கம் மறைக்கிறது என்று அவர்கள் கருதுகிறார்கள்.

எனவே, பொதுத்தேர்தல் முடிந்தவுடன் ஊடரங்குச் சட்டம் அமுல்செய்யப்படும் என்றும், நாடு முடக்கப்படும் என்றும் பெருமளவு மக்கள் உறுதியாக நம்புகிறார்கள்.

இதனால் முன்கூட்டியே பொருட்களை வாங்கி வைத்துக்கொள்வதிலும் அவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றார்கள்.

தேர்தலுக்குப் பின்னர் நாடு மீண்டும் முடக்கப்படும் என்று சாதாரண மக்கள் மத்தியில் உள்ள அச்சத்தைப் போக்குவதில் அரசாங்கத்தினால் வெற்றிப்பெற முடியவில்லை.

தேர்தலுக்குப் பின்னர், விலைவாசி பலமடங்கு அதிகரிக்கும் என்ற அச்சமும் மக்கள் மத்தியில் உள்ளது. தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்த காலத்தில் இருந்தே பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றது.

கொரோனாவுக்குப் பின்னர் இந்த நிலை மோசமடைந்துள்ளது. அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கை நிலைமையை இன்னும் மோசமாக்கி வருகின்றது.

மஞ்சள், போன்ற அத்தியாவசியப் பொருட்களை சாதாரண மக்களால் மாத்திரமன்றி, வசதி படைத்தவர்களால் கூட, கண்களால் காண முடியவில்லை.

அந்தளவுக்கு நிலைமை சென்றுவிட்டது. உளுந்து, பயறு, கௌபி போன்ற தானியங்கள் கூட வரலாறு காணாதளவுக்கு விலையேற்றத்தை சந்தித்துள்ளன.

ஏற்கனவே, பெருமளவு பொருட்களின் இறக்குமதிகளைத் தடை செய்து விட்ட அரசாங்கம், தேர்தலுக்குப் பின்னர் இறக்குமதிகளைப் முற்றாக தடை செய்து விடும் என்ற கருத்து சாதாரண மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் பொருட்களுக்கு தட்டுப்பாடு வரும் என்று கிராமங்களில் உள்ள மக்கள் கூட எதிர்பார்க்கின்றனர்.

பெரியளவில் பொருட் தட்டுப்பாடு வரும் என எதிர்பார்க்கின்ற மக்களுக்கு, தேவையான பொருட்களை வாங்கி சேமிக்கின்ற ஆற்றல் இல்லை.

கொரோனா தொற்று ஆரம்பத்தில் பொருட்களை வாங்கி குவிப்பதில் காட்டியளவுக்கு மக்கள் இப்போது ஆர்வம் காட்டவில்லை. அதற்கு காரணம் பொருளாதார ரீதியாக மக்கள் மிகவும் பலவீனமடைந்து போயிருக்கிறார்கள்.

இப்போதே இந்த நிலை என்றால், தேர்தலுக்கு பின்னர் அரசாங்கம் பொருளாதார நெருக்கடியை சமாளிக்கமுடியாமல் மக்களின் மீதே திணிக்கும் என்று கருதப்படுகின்றது.

இப்போதே தாங்கிக் கொள்ள முடியாத சுமையினால் அவதிப்படும் மக்கள் தேர்தலுக்குப் பிந்திய நாட்களை அச்சத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்த அச்சத்தை போக்கக் கூடிய நிலையில் அரசாங்கம் இல்லை. இதுதான் அரசாங்கத்தின் இயலாமை.

பொதுத் தேர்தலுக்குப் பின்னர் வடக்கில் இராணுவ அதிகாரம் மேலும் வலுவடையும், நாடு இராணுவ ஆட்சியை நோக்கி நகரும் என்றெல்லாம் கருத்துக்கள் பரவி வருகின்றன.

அண்மையில் வடக்கிற்கு பயணம் மேற்கொண்டிருந்த சமல் ராஜபக்ச, தன்னுடன் அழைத்துச் சென்றிருந்த முன்னாள் இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேராவை, இவர் தான் வடக்கின் அடுத்த ஆளுநர் என்று, அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறார்.

ஏற்கனவே, வடக்கு மாகாண ஆளுநர் தேர்தலுக்குப் பின்னர் மாற்றப்படவுள்ளார் என்று செய்திகள் வந்து கொண்டிருந்தன.

முன்னதாக, ஆளுநர் பதவிக்கு நியமிக்கப்படவுள்ளவர் என்று, மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்கவின் பெயர் அடிப்பட்டது. இப்போது மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேராவின் பெயர் அடிபடுகிறது.

வடக்கை இராணுவ ஆளுநரின் கட்டுப்பாட்டில் வைத்திருந்து பழக்கப்பட்ட ராஜபக்ஷவினருக்கு, சிவில் ஆளுநரை கையாளுவதில் பிரச்சினை இருப்பதாக தெரியவருகின்றது. அதனால் தான் மீண்டும் இராணுவ ஆளுநரை நோக்கி அரசாங்கம் திரும்ப முனைகிறது.

மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா வன்னிப் படைகளின் தளபதியாக இருந்தபோது, வவுனியா மாவட்டத்திலும், வெலிஓய பகுதியிலும் புதிய சிங்கள கிராமங்களையும் விகாரைகளையும் அமைப்பதிலும், அவற்றுக்குரிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதிலும், கூடுதல் கவனம் செலுத்தியவர்.

அவ்வாறான ஒருவர் ஆளுநராக பதவியேற்பது வடக்கின் இனப்பரம்பல் சூழலுக்கு ஆபத்தானது என்றே கருதப்படுகிறது.

வடக்கை இராணுவ நிர்வாகத்தில் வைத்திருப்பது மாத்திரம் இந்த அரசாங்கத்தின், திட்டமல்ல. ஒட்டுமொத்த நாட்டையுமே இராணுவ நிர்வாகத்துக்குள் வைத்திருக்கவே அரசாங்கம் விரும்புகின்றது.

அதனால் தான் சிவில் நிர்வாகப் பதவிகளில் முன்னாள் படை அதிகாரிகள் பணியில் அமர்த்தப்படுகின்றார்கள்.

சர்வதேச அளவில் கூட இதுகுறித்த கடும் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. சிவில் பதவிகளுக்கு இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இராணுவ ஆட்சியை நோக்கி நாடு நகர்த்தப்படுவதாக 10 சர்வதேச உரிமை மனித உரிமை அமைப்புகள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையிலும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், நாட்டை இராணுவ மயப்படுத்தப் போவதில்லை என்று அரசாங்கம் கூறிக்கொண்டிருந்தாலும், அதனை நிரூபிக்கத்தக்க வகையில் அரசாங்கம் நடந்து கொள்ளவில்லை.

பொதுத் தேர்தலுக்குப் பின்னர், நாட்டில் ஜனநாயகம் வலுப்பெறும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் இல்லாமலேயே போய்விட்டது. ஏனென்றால், மொட்டு ஆட்சி கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.

அண்மையில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, ராஜபக்சவினர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஜனநாயகத்தை மீட்க நீண்டகாலம் போராட வேண்டியிருக்கும் என்று கூறியிருந்தார்.

இது இராணுவ ஆட்சியை பற்றிய அச்சத்தை இன்னும் அதிகரிக்கச் செய்திருக்கிறது. இவ்வாறான அச்சத்தைப் போக்குவதில் தற்போதைய அரசங்கம் வெற்றி பெறவும் இல்லை. அதில் அக்கறை காட்டவும் இல்லை.

அதுபோலவே, பொதுத்தேர்தலுக்குப் பின்னர், மோசமடையக்கூடிய சில பிரச்சினைகளில், சர்வதேச உடன்பாடுகள் சிலவும் இருக்கின்றன.

அமெரிக்காவுடனான எம்.சி.சி உடன்பாடு, இந்தியாவுடனான ஈ.சி.ரி எனப்படும் கிழக்கு கொள்கலன் முனைய உடன்பாடுகள் ஆகியன சர்ச்சைக்குரியனவாக உள்ளன.

தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வர முன்னர் இந்த உடன்பாடுகளை கிழித்தெறிவோம் என்று சபதம் செய்திருந்தது.

ஆட்சிக்கு வந்த பின்னர் அவ்வாறு செய்வதற்கு அரசாங்கம் தயங்குகிறது.

பொதுத் தேர்தலுக்குப் பின்னர், அமெரிக்காவுடன் எம்.சி.சி உடன்பாட்டில் அரசாங்கம் கையெழுத்திடப் போகிறது என்று எதிர்கட்சிகள் கூறுகின்றன.

இன்னொரு புறத்தில் தேர்தலுக்குப் பின்னர் இந்தியாவிடம் கிழக்கு கொள்கலன் முனையம் ஒப்படைக்கப்படவுள்ளதாக எதிர்கட்சிகளும் தொழிற்சங்கங்களும் குற்றம் சாட்டுகின்றன.

அவ்வாறு நடக்காது என்று உறுதியாக கூறுகின்ற நிலையில் அரசாங்கம் இல்லை. சர்வதேச நாடுகளுடன் செய்துகொள்ளப்பட்ட உடன்பாடுகள் விடயத்தில் அவசரப்பட்டு முடிவுகளை எடுக்க முடியாது என்று அரசாங்கம் மழுப்பத் தொடங்கிய போதே, இந்த விடயங்களில் அரசாங்கம் பின்வாங்குகிறது என்ற சந்தேகம் பலருக்கு வந்துவிட்டது.

ஆக, பொதுத் தேர்தலுக்குப் பின்னர் அரசாங்கத்தின் முடிவுகளும், நிலைப்பாடுகளும் கூட, தலைகீழாக மாற்றம் காணக்கூடிய நிலையே காணப்படுகின்றது.

ஆக மொத்தத்தில், பொதுத் தேர்தலுக்குப் பின்னரான காலம் என்பது, சாதாரண மக்களால் நெருக்கடி மிக்கதாக எதிர்பார்க்கப்படுகிறது.

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

Get real time updates directly on you device, subscribe now.

You might also like