தோல்வியின் பின்னர் கட்சியின் தலைமையகத்திற்கு விஜயம் செய்த ரணில்! வெளியாகியுள்ள தகவல்

பொதுத் தேர்தலுக்கான பெறுபேறுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க முடிவுகள் அறிவிக்கப்பட்டதன் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை காரியாலயமான சிறிகொத்தாவிற்கு வருகை தந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறிகொத்தாவில் இன்று இடம்பெற்ற ஐக்கிய தேசியக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்திற்கு வருதை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி தனது வரலாற்றில் மிக மோசமான தோல்வியை சந்தித்துள்ளது.

நாடு முழுவதும் அந்த கட்சி 2 லட்சத்து 49 ஆயிரத்து 435 வாக்குகளை மாத்திரமே பெற்றுள்ளது. இது 2.15 வீதமாகும். 22 தேர்தல் மாவட்டங்களில் அந்த கட்சி ஒரு ஆசனத்தை கூட கைப்பற்ற முடியவில்லை என்பதுடன் விகிதாசார அடிப்படையிலான ஒரு தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி மட்டுமே கிடைத்துள்ளது.

இந்நிலையில்,ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைத்துள்ள ஒரே ஒரு தேசிய பட்டியல் உறுப்பினர் பதவிக்காக அந்த கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை பெயரிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்தப் பதவிக்காக கட்சிக்குள் உள்ளக மோதல் ஏற்படுவதனை தடுப்பதற்காக கட்சியின் தலைவருக்கு அந்த பதவியை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

இதேவேளை, தேர்தல் முடிவுகளின் படி சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்ட மொத்த வாக்குகளின் அடிப்படையில், அக்கட்சிக்கு 7 தேசியப் பட்டியல் ஆசனங்களைப் பெற்று எதிர்க்கட்சியாக செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.