இலங்கை வரலாற்றில் அரசியல் புரட்சியை ஏற்படுத்திய சஜித்

இலங்கை வரலாற்றில் ஐக்கிய மக்கள் சக்தி அரசியல் புரட்சி ஒன்றை செய்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வலுவாக பயணம் ஒன்றை ஆரம்பித்துள்ளோம். சுற்றியிருந்து கல்லடிக்கும் போது எங்களால் முன்னோக்கி செல்ல முடிந்தது.

இது தான் இந்த நாட்டில் ஒரே அரசியல் மாற்றம் என நாட்டிற்கே கூற விரும்புகின்றேன். இந்த சக்தி தான் எதிர்வரும் காலங்களில் நாட்டின் அதிகாரத்தை கைப்பற்றும் சக்தியாகும்.

மிக குறுகிய காலப்பகுதியில் இந்த அளவு மக்களை இணைத்துக் கொண்ட ஒரே கட்சி எங்கள் கட்சியாகும்.

தாமரை மொட்டிற்கு இவ்வளவு மக்களை சேர்க்க இரண்டு வருடங்களாகியது. தேர்தலுக்கு முகம் கொடுக்க நான்கு வருடங்களாகியது.

இவ்வளவு குறுகிய காலத்தில் எந்த ஒரு கட்சியாலும் இவ்வளவு பெரிய வெற்றியை பெற முடியவில்லை. 28 லட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

தேர்தலில் தோல்வியடைந்த ஒருவருக்கும் தேசிய பட்டியில் இடமில்லை. வெகுவிரைவில் தேசிய பட்டியல் உறுப்பினர்கள் அறிவிக்கப்படுவார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.