பிரதமராக சத்திய பிரமாணம் செய்து கொள்ள முன் வட மாகாணம் தொடர்பில் மஹிந்த தெரிவித்துள்ள விடயம்

இலங்கை தமிழர்களின் விடயத்தில் இந்தியா வலியுறுத்தி வரும் 13ஆவது அரசியலமைப்பு நடைமுறை தொடர்பில் இலங்கையின் பிரதமர் மஹிந்த ராஜபக்ச கருத்து கூறவில்லை என்று இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளதாக தெரியவருகிறது.

எனினும் தமது அரசாங்கத்தின் கீழ் வடக்கு மாகாண அபிவிருத்திக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பிரதமராக சத்திய பிரமாணம் செய்து கொள்வதற்கு சற்று முன்னர் இந்திய நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின் போது மஹிந்த ராஜபக்ச இதனைக் குறிப்பிட்டுள்ளார் என தெரியவருகிறது.

கடந்த ஆட்சிக்காலத்தில் துரதிஷ்டவசமாக ஸ்தம்பித்த அபிவிருத்திப் பணிகள் மீண்டும் விரைவுப்படுத்தப்படும் என்று மஹிந்த தெரிவித்துள்ளார்.

2014ஆம் ஆண்டு வரை தமது அரசாங்கம் அதிகாரத்தில் இருந்தபோது வடக்கு மாகாண அபிவிருத்தியில் பாரிய சேவைகள் செய்யப்பட்டன.

இதில் தொடருந்து சேவைகளை மீண்டும் ஆரம்பித்தமை, காங்கேசன்துறை துறைமுகப் பணிகளுக்கான முன்னெடுப்பை மேற்கொண்டமை உள்ளிட்ட பணிகளும் அடங்கும்.

இந்த நிலையில் தமது அரசாங்கம் இனம் அல்லது கலாச்சார பின்னணியைப் பொருட்படுத்தாமல் இலங்கை குடிமக்கள் அனைவரின் தேவைகளையும் பூர்த்தி செய்யும்.

வட மாகாணத்தில் வாழ்வாதார மேம்படுத்தல், விவசாயத்திற்கான நீர்ப்பாசனம், ஏற்றுமதியை மேம்படுத்துதல் மற்றும் சுகாதாரம் மற்றும் கல்வியில் வசதிகளை மேம்படுத்துதல் போன்றவற்றில் முன்னுரிமைகள் காட்டப்படுதல் அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார்.