புலிகளின் புதையலை தோண்ட முற்பட்டனர் என்ற குற்றச்சாட்டில் 8 பேர் கைது!

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் விடுதலைப் புலிகள் புதைத்து வைத்துள்ளதாக கூறப்படும் தங்கத்தை கண்டறியவதற்காக அதி நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இரண்டு ஸ்கேனர் இயந்திரங்களை எடுத்துச் சென்ற 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்களை நொச்சிமோட்டை பிரதேசத்தில் வைத்து இன்று(28) காலை கைது செய்ததாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், சந்தேகநபர்கள் பயணித்த வான் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

புதையல் தோண்டுவதற்குரிய பொருட்களுடன் வானில் சென்றவர்கள் 33, 32, 31, 44, 59 வயதுடைய காலி, கிளிநொச்சி, கொழும்பு, அனுராதபுரம், யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த எட்டு இளைஞர்களும் வவுனியா நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகே வானை தரித்து நின்ற சமயத்தில் வீதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த விசேட பொலிஸார் குறித்த வாகனத்தினை சோதனையிட்ட போது வாகனத்திலிருந்து இரு ஸ்கேனர் இயந்திரத்தினை கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் ஒரு இராணுவச் சிப்பாய் இருப்பதாகவும், சந்தேகநபர்கள் ஸ்கேனர் இயந்திரத்தை பயன்படுத்தி விடுதலைப் புலிகள் நிலத்திற்கு அடியில் புதைத்து வைத்துள்ளதாக கூறப்படும் தங்கத்தை தேட முயற்சித்துள்ளனர் என பொலிஸார் கூறியுள்ளனர்.

தாம் கைப்பற்றிய ஸ்கேன் இயந்திரங்கள் ஒரு கோடி ரூபாவுக்கும் மேல் பெறுமதியானது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளின் பின் எட்டு சந்தேகநபர்களையும் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட இரு ஸ்கேனர் இயந்திரம், மற்றும் அவர்கள் பயன்படுத்திய வான் நீதிமன்றில் ஒப்படைக்கப்பட உள்ளது.