யாழ்ப்பாணம் கொக்குவிலில் நேற்று முன்தினம் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இருவரும், ஆவா குழுவின் ஒளிப்படத்தில் இருந்தவர்கள் என்ற குற்றச்சாட்டில் மானிப்பாய் காவற்துறையினரால் அறுவருமாக எண்மர் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளனர் என காவற்துறையினர் தெரிவித்ததுள்ளனர்.
கொக்குவில், மற்றும் தெல்லிப்பளையைச் சேர்ந்த 25 வயதுடைய இருவரே இ்வ்வாறு கைது செய்யப்படுள்ளனர். அவர்களில் ஒருவர் ஏற்கனவே காவற்துறையினரை வெட்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றால் பிணைவழங்கப்பட்டுள்ளவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது எனவும், இவர்கள் இருவரும் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்தப்படுவர் எனவும், காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கொக்குவிலில் நேற்றுமுன்தினம் ஆவா குழுவைச் சேர்ந்தவர் எனக் கூறப்படும் ஒருவர் வீடு புகுந்து இளைஞர் ஒருவர் மீது வாளால் வெட்டியதில் காயமடைந்த நபர் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.







