கோப்பாய் காவல்துறையினரினால் ஒரே நாளில் 37 பேருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல்!

கோப்பாய் காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 27 பேர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் இன்று தண்டிக்கப்பட்டனர். அத்துடன், சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 7 பேர், டெங்கு நுளம்பு பெருக்கத்துக்கு ஏதுவாக குடியிருப்பு சூழலை வைத்திருந்த குற்றச்சாட்டில் 3 பேர் என 10 பேர் தண்டிக்கப்பட்டனர்.

யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று (26) ஒரே நாளில் 37 பேருக்கு எதிராக கோப்பாய் காவல்துறையினரினர் வழக்குத் தாக்கல் செய்தனர். குறித்த வழக்கு விசாரணைகள் யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது.

இதன்போது மதுபோதையில் சாரத்தியம் செய்தனர் என்ற குற்றச்சாட்டில் 27 பேர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.அவர்களில் 3 பேர் அரச உத்தியோகத்தர்கள் என காவல்துறையினர் மன்றில் தெரிவித்தனர்.

அரச உத்தியோகஸ்தர்கள் மூவருக்கும் 7 ஆயிரத்து 500 ரூபா தண்டமும் ஆயிரத்து 500 ரூபா அரச செலவும் விதித்து மன்று உத்தரவிட்டது. அத்துடன் அவர்கள் மூவரின் சாரதி அனுமதிப் பத்திரங்களும் 9 மாதங்களுக்கு இடைநிறுத்தி வைக்க மன்று கட்டளையிட்டது.

மேலும் அதே குற்றச்சாட்டில் முற்படுத்தப்பட்ட ஏனைய 24 பேருக்கும், 7 ஆயிரத்து 500 ரூபா தண்டம் செலுத்த வேண்டும், அத்துடன் 50 மணித்தியாலங்களுக்கு குறையாத சமூகப் பணியில் ஈடுபடவேண்டும் என்று மன்று உத்தரவிட்டது.

அதேவேளை அவர்கள் 24 பேரின் சாரதி அனுமதிப் பத்திரங்களை 9 மாதங்களுக்கு தடுத்தவைத்திருக்கவும் மன்று கட்டளையிட்டது.

அதேவேளை, புதுவருட தினத்தன்று சட்டவிரோதமாக அரச சாராயத்தை விற்பனை செய்தார் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் முற்படுத்தப்பட்டார். அவரிடம் மீட்கப்பட்ட 175 மில்லி லீற்றர் கொள்ளவு கொண்ட 54 போத்தல்கள் சாரயத்தையும் பெ காவல்துறையினரினர் சான்றுப் பொருளாக இணைத்தனர்.

அவர் குற்றத்தை ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில் 10 ஆயிரம் ரூபா தண்டம் செலுத்துமாறு நீதிமன்று உத்தரவிட்டது.

அதேவேளை சட்டவிரோதமாக சாரயம் விற்பனை செய்த குற்றச்சாட்டில் மேலும் 5 பேரிடமும் தண்டம் அறவீடு செய்து விடுவிக்க மன்று உத்தரவிட்டது.

கோப்பாய் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதியில் டெங்கு நுளம்பு பெருக்கத்துக்கு ஏதுவாக குடியிருப்பை வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் 3 பேர் மன்றில் முற்படுத்தப்பட்டனர். அவர்களிடம் தலா ஆயிரத்து 500 தண்டம் அறவிட மன்று கட்டளை வழங்கியது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like