நிதி அமைச்சராக கடமைகளை ஏற்றார் பிரதமர் மஹிந்த! புதிய 5000 ரூபா நாணயத்தாளும் வெளியீடு

நிதி அமைச்சராக பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்றைய தினம் பதவியேற்ற நிலையில், அதனை குறிக்கும் வகையில் புதிய 5000 ரூபா நாணயத்தாள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் வளாகத்தில் நிதி அமைச்சராக பிரதமர் மஹிந்த ராஜபக் இன்று கடமைகளை ஏற்றுக்கொண்டார். கடமைகளை ஆரம்பிப்பதற்கு முன்னர், பிரதமர் மதகுருக்களிடமிருந்து ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார்.

இதனையடுத்து, பிரதமர் மஹிந்த ராஜபக்ச கடமைகளைத் தொடங்கினார் என்று பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில், ஒரு புதிய 5,000 ரூபா நாணயத்தாள் வெளியிடப்பட்டது. மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ.டி லக்ஷ்மன் பிரதமரிடம் புதிய நாணயத்தாளினை வழங்கி வைத்தார்.

இதேவேளை, செப்டம்பர் 2 முதல் நடைமுறைக்கு வரும் 150,000 வேலைவாய்ப்பு திட்டத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மதிப்பாய்வு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.