150, 000 தொழில் வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் – ஜனாதிபதி தலைமையில் இன்று ஆராய்வு

பட்டதாரிகள் 51 ஆயிரத்து 135 பேர் நியமனத்துக்காக தகுதி பெற்றுள்ளனர்

தகைமை பெறாதவர்களின் பெயர் விபரங்களும் இணையத்தளத்தில்

வறுமை நிலை கூடியவர்களுக்கே குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கான தொழில் வாய்ப்பு

செப்டம்பர் மாதம் 02 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படுகின்ற ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் பேரை தொழிலில் அமர்த்தும் நிகழ்ச்சித்திட்டம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

தகைமை பெற்றுள்ள பட்டதாரிகள் கற்றுள்ள பாடவிதானங்களுக்கமைய குறித்த துறைகளில் தொழிலில் அமர்த்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

குறைந்த வருமானம் உடையவர்களுக்கான ஒரு இலட்சம் வேலைவாய்ப்புக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுக்கும்போது அனைத்து கிராம சேவை பிரிவுகளிலும் இருந்து வறுமை நிலையில் அதி கூடியவர்களை தெரிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் தொழில் வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் எதிர்கால செயற்பாடுகள் பற்றி இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்தக் கலந்துரையாடல் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்றிரவு அனுப்பிவைத்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

அரச சேவையில் நிலவும் பலவீனங்கள் மற்றும் குறைபாடுகளை ஒழிக்கும் வகையில் தொழிலில் உள்ளவர்களுக்கு பயிற்சிகளை வழங்குவதன் அவசியத்தையும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார்.

தனியார் துறையிலும் பயிற்சிகளுக்காக இணைக்கப்படுவர். தலைமைத்துவம், இலக்கை அடைதல், நம்பிக்கை உணர்வு என்ற விடயங்களை முக்கியத்துவப்படுத்தி ஒரு வருட கால பயிற்சி நெறிக்கு உள்வாங்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

புதிய இராஜாங்க அமைச்சுக்களின் இலக்கை அடைந்துகொள்வதற்காக தொழில் பெற்ற பட்டதாரிகளை இணைத்துக்கொள்வதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

பொதுத்தேர்தலுக்காக பல மாவட்டங்களில் மேற்கொண்ட பயணத்தின் போது பலர் பாடசாலைகளில் நிலவுகின்ற ஆசிரியர் குறைபாடுகள் பற்றியும் ஜனாதிபதி தெளிவுபடுத்தினர்.

புதிய நியமனம் பெற்றவர்களை அதற்காக நியமிப்பதற்கும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

ஒரு இலட்சம் வேலைவாய்ப்புக்காக தெரிவு செய்யப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெறுபவர்கள் 24 தொழில்துறைகளில் நிலவுகின்ற பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக நியமிக்கப்படுவர். அவர்களுக்கான பயிற்சிகளை பயிற்சி வாரியம் வழங்கும்.

ஜனாதிபதியின் செயலாளர் பீ.பீ ஜயசுந்தர, அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சின் செயலாளர் ஜே.ஜே ரத்னசிரி, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, பல்துறை அபிவிருத்தி செயலணியின் பணிப்பாளர் நாயகம் நந்த மல்லவாரச்சி ஆகியோர் உள்ளிட்ட பலர் கலந்துரையாடலில் பங்குபற்றினர்.