இலங்கையில் தேசிய சாதனை படைத்துள்ள யாழ். யுவதி

இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 56ஆவது கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர் நேற்று காலை நவீன மயப்படுத்தப்பட்ட கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் ஆரம்பமாகியுள்ளது.

போட்டிகளின் முதல் நாளான நேற்று நடைபெற்ற 23 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் வட மாகாண மெய்வல்லுனர் சங்கத்தைப் பிரதிநிதித்துப்படுத்தி கலந்து கொண்ட அனித்தா ஜெகதீஸ்வரன் 3.55 மீற்றர் உயரத்தில் தாண்டி மீண்டும் தேசிய சாதனை படைத்துள்ளார்.

இதன்மூலம், கடந்த ஒரு வருட காலப்பகுதியில் தொடர்ச்சியாக 5ஆவது தடவையாகவும் தேசிய சாதனையை முறியடித்த வீராங்கனையாக வரலாற்றில் அவர் இடம்பிடித்துள்ளார்.

போட்டியின் ஆரம்ப சுற்றில் 3.30 மீற்றர் உயரத்தைப் பாய்ந்த அனித்தா, 2ஆவது சுற்றில் 3.50 மீற்றர் உயரத்தைக் கடந்து, 2017இல் மாத்தறையில் நடைபெற்ற 43ஆவது தேசிய விளையாட்டு விழாவில் அவரால் நிலைநாட்டப்பட்ட (3.48 மீற்றர்) தேசிய சாதனையை முறியடித்துள்ளார்.

இதனையடுத்து 3.55 மீற்றர் உயரத்தைத் தெரிவு செய்த அனித்தா, முதலிரண்டு முயற்சிகளிலும் தோல்வியைத் தழுவினார். எனினும், இறுதி முயற்சியில் வெற்றி கொண்ட அவர், 2ஆவது தடவையாகவும் தேசிய சாதனையொன்றை நிகழ்த்தினார்.

எனினும், ஆசிய அடைவுமட்டமான 3.80 மீற்றர் உயரத்தை மனதில் கொண்டு 3.60 மீற்றர் உயரத்தை அடுத்த இலக்காக அனித்தா தெரிவுசெய்த போதும் அவர் மேற்கொண்ட 3 முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது.

இதன்படி, கடந்த வருடம் மாத்தறையில் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவின் முதல்நாளில் தேசிய சாதனை படைத்த அனித்தா, இவ்வருடம் கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளின் முதல் நாளில் மற்றுமொரு தேசிய சாதனை படைத்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

2013ஆம் ஆண்டிலிருந்து யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சி.சுபாஸ்கரனின் பயிற்றுவிப்பின் கீழ் தனது பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்ற அனித்தா, கடந்த ஜுன் மாதம் நடைபெற்ற தாய்லாந்து திறந்த மெய்வல்லுனர் போட்டித் தொடரில் முதற்தடவையாக இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தேசிய சாதனை படைத்த பிறகு ஊடகங்களுக்கு அனித்தா வழங்கிய பிரத்தியேக செவ்வியில், தேசிய சாதனையை மீண்டும் புதுப்பிக்க முடிந்தமை மகிழ்ச்சியளிக்கிறது.

எனது வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்து வருகின்ற எனது பயிற்சியாளர் சுபாஸ்கரன் ஆசிரியருக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என தெரிவித்துள்ளார்.

அத்துடன், 3.60 மீற்றருக்கு மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிவடைந்தமை தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு அனித்தா பதிலளிக்கையில், உண்மையில் 3.55 மீற்றரை உயரத்தை தாவுவதற்கு கிடைத்தமையே மிகப் பெரிய வெற்றி என்று சொல்லலாம்.

ஆனாலும் கடந்த இரண்டு வருடங்களாக ஆசிய அடைவுமட்டமான 3.80 மீற்றர் உயரத்தைத் தாவுவதற்கு கடுமையான முயற்சி செய்து வருகிறேன். எனவே, அதற்கு கிடைத்த வெற்றியாக நான் இதை கருதுகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தெல்லிப்பளை மகாஜன கல்லூரியில் கல்வி பயிலும் மாணவியே அனிதா ஜெகதீஸ்வரன்.