உணவு தேடி கிச்சனுக்குள் நுழைந்த புள்ளிமான்!

நெல்லை மாவட்டத்தில் மலைப் பகுதியில் இருந்து உணவு தேடி ஊருக்குள் நுழைந்த புள்ளிமான் ஒன்று, விவசாயி வீட்டுக்குள் நுழைந்த சம்பவம் நடந்துள்ளது. வனத்துறையினர் உதவியுடன் பிடிக்கப்பட்ட அந்த மான், மீண்டும் வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விடப்பட்டது.

நெல்லை மாவட்டத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. தற்போது வெப்பம் 103 டிகிரியைக் கடந்து விட்டதால், வெயிலின் கொடுமையைச் சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் முடங்கிக் கிடக்கிறார்கள். வெயிலின் தாக்கத்தைச் சமாளிக்க முடியாமல் வன விலங்குகளும் திணறி வருகின்றன. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள விலங்குகளுக்குத் தேவையான உணவு மற்றும் தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

அதனால் உணவு மற்றும் தண்ணீருக்காக வன விலங்குகள் மக்களின் குடியிருப்பு பகுதிக்குள் நுழையும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. இந்தநிலையில், மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து மேய்ச்சலுக்கு வந்த இடத்தில் வழி தவறிய புள்ளிமான் ஒன்று பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூர் கிராமத்தில் நுழைந்துள்ளது. கிராமத்தில் உள்ள நாய்கள் அதனை விரட்டியதால் அது கிராமத்துக்குள் ஓடியிருக்கிறது.

அச்சம் அடைந்த புள்ளிமான், அங்குள்ள மாரியப்பன் என்பவர் வீட்டிற்குள் புகுந்தது. வீட்டுக்குள் சென்ற மான், கிச்சனுக்குச் சென்று பாத்திரத்தில் இருந்த தண்ணீரைக் குடித்துள்ளது. பின்னர் உணவு கிடைக்குமா எனத் தேடியுள்ளது. திடீரென மான் வீட்டுக்குள் நுழைந்ததால் அச்சம் அடைந்தவர்கள், பின்னர் கிராம மக்களின் உதவியுடன் அதனைப் பிடித்து கட்டி வைத்தனர். ஊருக்குள் மான் நுழைந்தது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

குற்றாலம் வனத்துறையின் வனச்சரகர் ஏ.வி.தார்ஷீஷ் உத்தரவின்படி வனவர்கள் செந்தில்குமார், ராஜேந்திரன், வேட்டை தடுப்புக் காவலர் மாடசாமி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று புள்ளிமானைப் பிடித்து சென்று மத்தளம்பாறை வனப்பகுதியில் விட்டனர். தப்பி வந்த புள்ளிமான் 3 வயதுள்ள ஆண் மான் என்றும், உணவு மற்றும் தண்ணீர் தேடி வந்திருக்கக் கூடும், அல்லது சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் விரட்டியதால் உயிர் தப்பி ஓடிவந்திருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like