மன்னாரில் யாழ். யுவதி கொலையில் சிக்கிய சகோதரி! வெளிவரும் தகவல்கள்

மன்னாரில் அண்மையில் சடலமாக மீட்கப்பட்ட யுவதியின் கொலையில் அவரின் சகோதரியே பிரதான சூத்திரதாரி என்பதை புலனாய்வு பிரிவினர் கண்டறிந்துள்ளதாக தெரியவருகிறது.

இதையடுத்து யுவதியின் கொலையுடன் தொடர்புடைய இரண்டு பெண்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த 13ஆம் திகதி மன்னார் – சௌத்பார் புகையிரத நிலைய பிரதான பாதை அருகில் காணப்படும் உப்பளத்திற்கு சொந்தமான உப்பு உற்பத்தி பாத்தியில் இருந்து இளம் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டிருந்தது.

அது தொடர்பான தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், சடலத்தை மீட்டு மன்னார் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற நீதிவான் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் யுவதியின் சடலம் மன்னார் பொது வைத்தியசாலையில் அடைாளம் காணப்படாத நிலையில் வைக்கப்பட்டிருந்தது.

இதேவேளை யுவதி பாலியல் வல்லுறவிற்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாமென்ற சந்தேகம் ஏற்பட்டிருந்தது.

இந்த கொலை தொடர்பான மர்மம் நீடித்து வந்த நிலையில், கொழும்பிலிருந்து மன்னாரிற்கு வந்த விசேட புலனாய்வு அணியொன்று விசாரணைகளை முன்னெடுத்திருந்தது.

இந்த விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளிப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சடலமாக மீட்கப்பட்ட யுவதி, யாழ்ப்பாணம் நெடுந்தீவை சேர்ந்த சுமார் 21 வயதுடையவர் என தெரியவருகிறது.

யுவதியின் சகோதரியும், இன்னொரு பெண்ணும் கொலை சூத்திரதாரிகள் என சந்தேகிக்கப்பட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொலையை செய்தார்கள் என்ற சந்தேகத்தில் மன்னாரை சேர்ந்த சிலர் தேடப்பட்டு வருவதாகவும், அவர்கள் தற்போது தலைமறைவாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவ தினத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து கொலையான யுவதியை, கைதான இரண்டு பெண்களும் (சகோதரியும் மற்றையவரும்) முச்சக்கர வண்டியில் மன்னாரிற்கு அழைத்து வந்தது விசாரணையில் வெளிப்பட்டுள்ளது.