நியமனம் நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகள் செப். 15இற்கு முன் மேன்முறையீடு செய்யலாம்

பட்டதாரி வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகளை வரும் செப்ரெம்பர் 15ஆம் திகதிக்கு முன் மேன்முறையீடுகளை சமர்ப்பிக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்த தகவலை அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் சௌபாக்கியத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக 50 ஆயிரம் பட்டதாரிகளை அரச சேவைக்குள் இணைக்கும் திட்டத்தில் பயிலுனர் நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தத் திட்டத்தில் கடந்த மார்ச் மாதம் நியமனக் கடிதம் வழங்கப்பட்டு தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தலால் அந்த நியமனம் இடைநிறுத்தப்பட்டது.

எனினும் அந்த திட்டம் மீள நடைமுறைக்கு வரும் நிலையில் வெளிநாட்டு உயர் கல்வி நிலையங்களில் பட்டப்படிப்பை நிறைவு செய்த பட்டதாரிகள் மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றி ஊழியர் சேமலாப நிதியத்தில் பங்காளிகளாக உள்ளோருக்கு முன்னர் நியமனக் கடிதம் வழங்கப்பட்டு இம்முறை அந்த நியமனம் நிராகரிக்கப்பட்டுள்ளது.