காதலியின் கழுத்தை அறுத்து கொலை செய்த காதலன்

காதல் தொடர்பு சம்பந்தமாக ஏற்பட்ட பிரச்சினையை அடிப்படையாக கொண்டு இளைஞர் ஒருவர், தனது காதலியை கூரிய ஆயுதத்தினால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார் என தெரியவருகிறது.

இந்த நிலையில் குறித்த இளைஞர் விஷம் அருந்திய நிலையில் காட்டில் விழுந்து கிடந்த போது பிரதேசவாசிகள் அவரை மீட்டு சிலாபம் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

மாதம்பை – தும்மல்லசூரிய பிரதேசத்தை சேர்ந்த (22 வயது) தும்பு ஆலையில் கணக்காளராக பணியாற்றி வந்த யுவதியே கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்த இளைஞருக்கும் கொலை செய்யப்பட்ட யுவதிக்கும் இடையில் நீண்டகாலமாக காதல் இருந்து வந்துள்ளதுடன் யுவதியின் தரப்பினர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர் என தெரியவருகிறது.

இவ்வாறான பின்னணியில் யுவதி தனது காதலை கைவிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இளைஞன் யுவதியை கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யுவதி தனது மாமனாருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுக்கொண்டிருந்த போதே கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்த சந்தேகநபர் தும்மல்லசூரிய பிரதேசத்தை சேர்ந்தவர் என்பதுடன் கறுப்பட்டி உற்பத்தியில் ஈடுபட்டு வந்தவர் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

சம்பவம் தொடர்பான நீதவான விசாரணைகளை சிலாபம் பதில் நீதவான் மேற்கொண்டதுடன் இளைஞர் பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மாதம்பை பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.