யாழில் தீயால் முற்றாக நாசமான வீடு: நிர்க்கதியில் குடும்பம்! (VIDEO)


யாழ்.ஊரெழு கிழக்கு ஆனந்தகானம் பகுதியில் இன்று சனிக்கிழமை(21) பகல் இடம்பெற்ற பாரிய மின் ஒழுக்கினால் வீடொன்று முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

எனினும், குறித்த அனர்த்தத்திலிருந்து குடும்பமே தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளது.

நடந்தது என்ன?

மேற்படி பகுதியில் வசித்து வரும் இளம் தம்பதியினர் தமது சிறுவயதான இரு பிள்ளைகளையும் தமது வீட்டுக்குச் சற்றுத் தொலைவிலுள்ள நெருங்கிய உறவினரொருவரின் வீட்டில் கொண்டு சென்று பாதுகாப்பாக விட்டுவிட்டு மனைவி வைத்தியசாலையின் மகப்பேற்றுக் கிளினிக்குக்கும், கணவர் வேலைக்கும் சென்றுள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை-09.30 மணியளவில் குறித்த வீடு திடீரெனக் கொளுந்து விட்டு எரிந்துள்ளது. இதனால் மேற்படி வீட்டுக்கு அயலிலுள்ள மக்கள் ஒரு வித பரபரப்புக்குள்ளாகினர். வீட்டினுள் யாருமில்லை என அறிந்த பின்னரே அவர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேற்படி இளம் தம்பதியினருக்குத் தொலைபேசி மூலம் தகவல் வழங்கப்பட்டது. வீடு எரிந்து முற்றாக நாசமடைந்த விடயத்தைக் கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்த மகப்பேற்றுக் கிளினுக்குச் சென்ற மனைவி அங்கேயே மயங்கி விழுந்ததாகத் தெரிய வருகிறது.

இந்நிலையில் அவரது மயக்கத்தைப் போக்கிய மருத்துவத் தாதி முச்சக்கர வண்டியில் பாதுகாப்பாக வீடு கொண்டு வந்து சேர்த்துள்ளார். இந்நிலையில் கூலி வேலைக்குச் சென்ற கணவரும் சம்பவத்தைக் கேள்விப்பட்டு அங்கு விரைந்துள்ளார்.

வீட்டின் வடக்குப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த பிரதான மின் அழுத்தி வெடித்துச் சிதறியமையை மேற்படி வீட்டுக்கு அருகிலுள்ள இரு யுவதிகள் கண்டுள்ள போதிலும் வீட்டின் குசினிக்குள் காணப்பட்ட காஸ் அடுப்பு வெடித்திருக்கக் கூடும் என்பதால் பொதுமக்கள் குறித்த பகுதிக்கு அருகில் செல்வதற்கு அஞ்சினர்.

பிற்பகல் வரை அணையாத தீ மேற்படி வீட்டில் கடும் சுவாலையுடன் எரிந்த தீயை அணைப்பதற்கு வீட்டுக்குச் சொந்தமானவர்களும், அயலவர்களும் பல மணிநேரம் போராடிய போதும் தீயைக் கட்டுப்படுத்த முடியவில்லை. பிற்பகல்- 02 மணிக்குப் பின்னரே தீ கட்டுப்பாட்டிற்குள் வந்தது. தீ விபத்து இடம்பெற்ற போது வீட்டினுள்ளிருந்து பாரிய வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

மேற்படி தீவிபத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பில் பாதிப்புக்குள்ளான வீட்டு உரிமையாளர் திருமதி- தீபா துருஷன் கருத்துத் தெரிவிக்கையில்,

எங்களுக்குத் திருமணமாகி எட்டு வருடங்களாகிறது. எட்டு வருடங்களாக இந்த வீட்டிலேயே வசித்து வருகிறோம். எனது கணவர் கூலி வேலை செய்து வருகிறார். அவர் நாளாந்தம் உழைத்து வரும் பணத்திலேயே எங்கள் வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது.

எனது வயிற்றில் தற்போது பிள்ளை தங்கியுள்ள நிலையில் கிளினிக்கு அவரையும் அழைத்து வருமாறு வைத்தியசாலையில் அழைப்பு விடுத்த போதிலும் கஸ்ரத்தின் நிமிர்த்தமே அவர் இன்றைய தினம் வேலைக்குச் சென்றுள்ளார்.

வீடு பல வருடங்களாகத் திருத்தப்படாத நிலையிலும், அடிப்படை வசதிகள் இல்லாத நிலையிலும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னரே வங்கியில் கடன் எடுத்து வீடு திருத்தினோம். மின்சார வேலைகள் செய்தோம். இதுவரை காலமும் மலசலகூட வசதியில்லாமல் சிரமப்பட்டு வந்த நாம் மலசலகூட வசதியை ஏற்படுத்துவதற்காக 60 ஆயிரம் ரூபா பணத்தை வங்கியில் லோன் எடுத்து வீட்டுக்குள் வைத்திருந்தோம். அந்தப் பணமும் தீயால் எரிந்து நாசமாகியுள்ளது.

அது மாத்திரமன்றி கணவர் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தில் சிறிது சிறிதாகச் சேர்ந்த உடுப்புடவைகள், அலுமாரி, மேசை, கட்டில், இரு கைத்தொலைபேசிகள் மற்றும் மகப்பேற்றுக்காக வாங்கி வைத்திருந்த பொருட்கள், சமையல் பாத்திரங்கள் என்பன தீயில் எரிந்துள்ளதுடன், நிவாரணப் பொருட்கள், வங்கிப் புத்தகம், சாரதி அனுமதிப்பத்திரம் என்பனவும் தீயில் எரிந்து முற்றாகச் சேதமாகியுள்ளது. இரண்டாம் தரம் மற்றும் முன்பள்ளியில் கல்வி கற்கும் இரு பிள்ளைகளினதும் கற்றல் உபகரணங்கள், சீருடைகள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும் தீயில் எரிந்துள்ளது.

வீடும், வீட்டுக்குள்ளிருந்த பொருட்களுமாக ஒன்பது இலட்சம் ரூபாவிற்கும் மேற்பட்ட பெறுமதியான பொருட்கள் தீயால் நாசாமாகியுள்ளது. இதனால், நாங்கள் செய்வதறியாது நிற்கிறோம்.

நானும், கணவரும், எனது இரண்டு பிள்ளைகளும் வீடு தீயால் எரிந்துள்ளமையால் நிர்க்கதியாக்கப்பட்டுள்ளோம். நாங்கள் வறுமை நிலையிலுள்ள நிலையில் எங்களுக்குரிய நஷ்ட ஈடு பெற்றுத் தரப்பட வேண்டும் என்றார்.

இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பாக முற்பகல்- 11 மணிக்கு கோப்பாய்ப் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட போதிலும் நீண்ட நேரமாகியும் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தரவில்லை என விசனம் தெரிவிக்கப்படுகின்றது.