நாங்கள் இப்போது உருவாக்கியுள்ள ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேர் கொண்ட புதிய தொழிற்படையை வழமையாக வேலைவாய்ப்பு வழங்குவது போன்று அலுவலங்களுக்குள் மட்டுப்படுத்த போவதில்லை.
அவர்களை பொருளாதார நடவடிக்கைகளுக்கு நேரடியாக பங்களிப்பு செய்யும் வகையில் விவசாயத்துறை, நிர்மாணத்துறை போன்ற துறைகளில் ஈடுபடுத்துவோம். அவர்களை சிறந்த நிபுணத்துவம் கொண்டவர்களாக மாற்றுவோம். அதன் மூலம் சமூகத்தில் வறுமைக் கோட்டின் கீழுள்ள குடும்பங்களை வளப்படுத்துவோம்.
இவ்வாறு பிரதமர் மகிந்த ராஜபக்ச, நாடாளுமன்றில் இன்று தெரிவித்தார்.
இடைக்கால கணக்கறிக்கையை இன்று நாடாளுமன்றில் சமர்ப்பித்து உரையாற்றிய போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
பிரதமரின் உரை தொடர்பில் அவரின் ஊடகப் பிரிவு அனுப்பிவைத்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் தலைமையிலான அரசின் பிரதமர் பதவிக்கு மேலதிகமாக நிதி அமைச்சராக நான் 2020 ஓகஸ்ட் 18ஆம் திகதி கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டேன்.
கோவிட் – 19 தொற்றுக்கு மத்தியில் பல நாடுகள் கடும் நெருக்கடிக்கும், ஆதரவற்ற நிலைக்கும் தள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில், இலங்கை இந்த தொற்றை வெற்றிகரமாக எதிர்கொண்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு உள்பட ஏனைய சர்வதேச அமைப்புகள் ஏற்றுக்கொண்டுள்ளன.
நாடாளுமன்றம் செயற்படாத சந்தர்ப்பத்தில்கூட ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட வேலைத்திட்டத்தின் ஊடாக நாட்டின் நிறுவன கட்டமைப்பு வலுவாக செயற்பட்டமையால் அந்த நிலமைக்கு எமக்கு மிகவும் ஆக்கபூர்வமாக முகங்கொடுக்க கூடியதாக அமைந்தது.
சுகாதாரத்துறை, இராணுவத்தினர் மற்றும் நிர்வாக கட்டமைப்பு அத்துடன் வங்கி முறைமை உள்ளிட்ட நாட்டின் பொருளாதார மையங்களை சிறப்பாக கையாள்வதற்கு நாட்டின் தொலைநோக்குடைய தலைமைக்கு முடியுமானதாக அமைந்தது.
நாடு முடக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளை செயற்படுத்துவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. விவசாயத்துறையை பராமரிக்க சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன.
2019 நவம்பர் மாதம் இந்த அரசைப் பொறுப்பேற்கும் போது நாட்டின் பொருளாதாரம் மிகவும் ஆபத்தான நிலையில் காணப்பட்டது.
2014 ஆம் ஆண்டு நாம் நாட்டை ஒப்படைக்கும் போது நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதம் 5 சதவீதத்திற்கும் 6 சதவீதத்திற்கும் இடையில் காணப்பட்ட போதிலும் இந்த நிலமை வெகுவாக குறைவடைந்து 2019 ஆம் ஆண்டு இறுதியாகின்ற போது தெற்காசியாவில் மிகக் குறைந்த பொருளாதார வளர்ச்சி மட்டத்திற்கு அதாவது, 2 சதவீதம் வரை குறைந்திருந்தது.
நாட்டில் வர்த்தக நடவடிக்கைகள் சரிவடைந்தன. உள்ளூர் நிர்மாணக் கைத்தொழில், ஒளடத நிறுவனங்கள் மற்றும் உர நிறுவனங்களுக்கான கட்டணங்கள் செலுத்தப்பட்டிருக்கவில்லை. அதன்படி, 2019 ஆம் ஆண்டில் செலுத்தப்படாத கட்டணங்கள் 242 பில்லியன் ரூபாய், அதாவது இந்த ஆண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.3 சதவீதத்திற்கும் அதிகமான அளவை தாங்கிக் கொள்வதற்கு வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு வரவுசெலவு திட்ட பற்றாக்குறை 6.8 சதவீதமாக இருப்பதாக அறிவிக்கப்பட்ட போதிலும், உண்மையில் இந்த செலுத்தப்படாத கட்டணங்களுடன் நோக்கும் போது வரவுசெலவு திட்ட பற்றாக்குறை 9 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.
இவை அனைத்தினாலும் பொருளாதார நடவடிக்கைகள் சீர்குலைந்து காணப்பட்டன. இந்த சூழ்நிலையில் பொருளாதாரம் சுருங்கி காணப்பட்டது. அவ்வாறான நிலையில் காணப்பட்ட வரி முறை எந்தவகையிலும் பொருளாதாரத்திற்கு தூண்டுதலாக காணப்படவில்லை. இதனால் நாட்டில் நிலவிய அதிக வட்டி விகிதங்கள் உள்ளூர் பொருளாதாரத்திற்கு ஏற்ற புதிய முதலீட்டு வாய்ப்புகளை அனுமதிக்கவில்லை.
எமது நாட்டு மக்களுக்கு உள்ள ஆக்கபூர்வமான தொழில்முயற்சிகளின் மூலம் பயனடைவதற்கு தற்போதுள்ள பொருளாதார கட்டமைப்பில் இடமில்லை. இந்த நிலைமையை கடந்த ஆண்டுகளில் நாட்டில் இருந்த எந்தவொரு ஆட்சியாளரினாலும் புரிந்து கொள்ள முடியாது போனது.
கோவிட்-19 தொற்று பரவுவதற்கு முன்னதாகவே வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு பொருளாதாரத்தை புதுப்பிப்பதற்கான முயற்சி என்ற தொகுப்பு அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு குறைந்த வட்டி வீதத்தில் கடன் வழங்குதல் மற்றும் அப்போதைய கடன்களை மறுசீரமைப்பதற்கு ஆரம்பிக்கப்பட்டது.
கோவிட்-19 தொற்றுக்கு பின்னர் நாட்டை முடக்ககும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டு ஒரு மாதம் செல்வதற்கு முன்னதாக ஏற்படக்கூடிய ஆபத்து நிலை குறித்து விளங்கிக் கொண்டு அதனைவிட பரந்த தொகுப்பொன்றை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தினோம்.
இதன்மூலம் நாட்டின் தொழில்முனைவோர் மற்றும் உள்ளூர் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு நாம் எதிர்பாராத வகையில் பொருளாதாரத்தில் செயற்பட்டு நீடித்திருக்க முடிந்துள்ளது. ஏற்றுமதி வருவாய் எதிர்பாராத விதமாக அதிகரித்துள்ளது.
இவ்வாறான சூழ்நிலையில்தான் ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனம் முன்வைக்கப்பட்டது. இந்த கொள்கை உள்ளூர் வர்த்தகர்களை அடிப்படையாகக் கொண்ட கொள்கையாகும். இந்த கொள்கையின் ஊடாக நாட்டின் அனைத்து மூலை முடுக்குகளிலுமுள்ள குடிமக்களின் அடிப்படை உரிமை, அதாவது பொருளாதார ரீதியில் பலமான பாதுகாப்பான நாட்டில் வாழ்வதற்கான விருப்பத்தை நிறைவேற்றி கொடுப்பதற்கு திறன் உள்ளது. இந்த பரந்த வேணவாவை அடைவதற்கு ஏற்ற வகையில் நாட்டின் உள்ளூர் பொருளாதாரம் குறித்து விரிவாக ஆராய்ந்த பின்னரே அமைச்சுகளின் நோக்கங்கள் தீர்மானிக்கப்பட்டன.
இந்த ஒவ்வொரு அமைச்சகத்திற்கும் ஒதுக்கப்பட்டுள்ள பணியின் நோக்கத்தை நாம் ஆராய்ந்தால், உண்மையிலேயே சுபீட்சத்தின் நோக்கு கொள்கையை நோக்கி பயணிக்கும் பாதை தெளிவாக விளங்கும்.
2019 நவம்பர் மாதம் ஜனாதிபதி நியமிக்கப்படும் போது புதிய அரசு ஒன்றை நியமித்து கொண்டு புதிய பொருளாதார கொள்கை ஊடாக இந்நாட்டிற்கு சிறந்த பொருளாதாரமொன்றை வழங்கக்கூடிய வாய்ப்பு நாடாளுமன்றத்தில் சிறுபான்மை அரசாகக் காணப்பட்டதால் இழக்க நேரிட்டது. செலுத்தப்படாத கட்டணங்களை செலுத்துவதற்கு திருத்தம் பெப்ரவாரி மாதம் என்னால் சமர்ப்பிக்கப்பட்டது.
ஆனால், அன்று பெரும்பான்மை பலம் கொண்டிருந்த இன்றைய எதிர்க்கட்சி அதற்கு பாதிப்பை ஏற்படுத்தியது. அன்று பொருளாதாரத்தை உயிர்ப்பிப்பதற்கு இருந்த வாய்ப்பு இந்த தீர்மானத்தின் ஊடாக தாமதாக்கப்பட்டது.
அவ்வாறான நிலையில்தான் இன்று எனக்கு 2020 ஆம் ஆண்டிற்கான குறை நிரப்பு மதிப்பீட்டை சமர்ப்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 2020 செப்டம்பர் முதல் டிசம்பர் வரையான 4 மாத காலத்திற்கான அரசின் செலவுகளை ஈடுசெய்வதற்கு ஆயிரத்து 900 பில்லியன் ரூபாய் நிதியை ஒதுக்கிக் கொள்வதற்கு மற்றும் அதற்காக ஆயிரத்து 300 பில்லியன் ரூபாய் கடன் வரம்பை அங்கீகரித்துக் கொள்வதற்கே இந்த குறை நிரைப்பு மதிப்பீடு முன்வைக்கப்படுகிறது.
2020 ஆம் ஆண்டிற்கான இந்த குறை நிரப்பு மதிப்பீடுகள் அனைத்தையும் ஒதுக்கீட்டுச் சட்டங்கள் மூலம் நாங்கள் முன்வைப்போம். 2020ஆம் ஆண்டின் முதல் 8 மாதங்களின் மொத்த அரச வருவாய் ரூபாய் 910 பில்லியன் பெற்றுக் கொள்ளப்பட்டிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. முதல் 8 மாதங்களில் அரச ஊழியர்களின் ஊதியத்திற்காக 521 பில்லியன் ரூபாய் செலவிடப்பட்டது. அதில் வட்டி செலுத்துவதற்கு ரூபாய் 675 பில்லியன் செலவிடப்பட்டதுடன், அரச மானியங்கள் மற்றும் பிற வளாகங்களுக்கு சுமார் 390 பில்லியன் ரூபாய் செலவாகின்றது.
அதில் 2019ஆம் ஆண்டு முதல் செலுத்தப்படாத கட்டணங்களை செலுத்துவதற்கு பெரும் தொகையை செலவிட வேண்டியுள்ளது. அதன்படி அரசின் செலவு ஒருவாறு நிர்வகிக்கப்பட்டுள்ளதுடன் எதிர்காலத்தில் அதிக பொருளாதார வளர்ச்சி விகிதத்துடன் அரசாங்க வரவுசெலவு திட்ட பற்றாக்குறையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த காலங்களில் மொத்த கடன் தொகையில் அரைவாசிக்கு மேல் வெளிநாட்டு கடனாக இருந்தது.
இந்த நிலையில் 9 பில்லியன் ரூபாயை அண்மித்த அனைத்து திட்ட கடன்களையும் மீளாய்வு செய்வதற்கு அரசு தீர்மானித்துள்ளது. இதில் சில திட்டங்கள் உள்ளூர் ஒப்பந்தக்காரர்களினால் குறைந்த விலையில் நிறைவு செய்யக்கூடியவையாகும். சில திட்டங்களினால் உண்மையில் சமூக அல்லது பொருளாதார ரீதியில் எவ்வித நன்மைகளும் இல்லை.
இதன் மூலம் திட்டங்களை செயற்படுத்துவதனை முழுமையாக நிறுத்துவது என்று பொருள்படாது. நாங்கள் இங்கு கடனுக்கு பதிலாக முதலீடுகளை ஊக்குவிப்பதற்கு முக்கியமாக நடவடிக்கை எடுப்போம். இந்த கொள்கை ஊடாக அரசின் செலவினங்களை குறைத்து பொருளாதாரத்தை மேம்படுத்தலாம்.
நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் அரசு. நாங்கள் வழங்கிய வாக்குறுதிகளை முறையாக நிறைவேற்றுவதனால்தான் நாங்கள் தேர்தலுக்கு முன்னர் வழங்குவதாக உறுதியளித்த ஒரு இலட்சத்து 60 ஆயிரம் வேலைவாய்ப்புகளை தேர்தல் நிறைவடைந்து இரு வாரங்களுக்குள் வழங்க ஆரம்பித்தோம்.
நாங்கள் இப்போது உருவாக்கியுள்ள தொழிற்படையை வழமையாக வேலைவாய்ப்பு வழங்குவது போன்று அலுவலங்களுக்குள் மட்டுப்படுத்த போவதில்லை. அவர்களை பொருளாதார நடவடிக்கைகளுக்கு நேரடியாக பங்களிப்பு செய்யும் வகையில் விவசாயத்துறை, நிர்மாணத்துறை போன்ற துறைகளில் ஈடுபடுத்துவோம். அவர்களை சிறந்த நிபுணத்துவம் கொண்டவர்களாக மாற்றுவோம். அதன் மூலம் சமூகத்தில் வறுமைக் கோட்டின் கீழுள்ள குடும்பங்களை வளப்படுத்துவோம்.
நாங்கள் இந்த அரசைப் பொறுப்பேற்கும் போது ஊசி முதல் பெரும் இயந்திரங்கள் வரை அனைத்தையும் இறக்குமதி செய்கிறார்கள். புளி மாத்திரமன்றி உள்ளூர் விவசாயிகளை பாதிக்கும் வகையில் மிளகு, மஞ்சள் போன்றவற்றையும் இறக்குமதி செய்தனர். பட்டத்தையும் கொண்டுவந்துள்ளனர்;. வெசாக் தோரணங்களையும் கொண்டுவந்தனர்.
இதன்மூலம் உள்ளூர் உற்பத்தியாளர்கள் ஊக்கமிழந்ததுடன், புதிய உற்பத்திகளை சந்தையில் அறிமுகப்படுத்துவதற்கும் தயக்கமடைந்துள்ளனர். நமது வெளிநாட்டு இருப்புகள் உண்மையில் அத்தியவசியமற்ற பொருள்களை இறக்குமதி செய்வதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக எமது அந்நிய செலாவணி தேவையற்று ஏற்ற இறக்கமடைந்துள்ளது. இது தொடர்பில் சிறந்த புரிதலுடன் நாம் இறக்குமதியை அத்தியவசியமான பொருள்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தியுள்ளோம். இதன் பிரதிபலன் இன்று எமக்கு விளங்குகிறது. இதன் மூலம் அந்நிய செலாவணியை நிலையான மட்டத்தில் பேணுவதற்கு முடிந்துள்ளது. இவற்றில் இறுதி பிரதிபலனை பெறுவது யார்? எமது உள்ளூர் தொழில்முனைவோர், எமது வாடிக்கையாளர் உண்மையில் எமது மக்கள்.
இந்நாட்டின் பொருளாதாரத்தை உயிர்ப்பிப்பதற்கு இந்த நாடாளுமன்றத்திற்கு ஒரு பெரும் பொறுப்புண்டு. அதற்கு ஜனாதிபதி உள்ளிட்ட எமது அரசு, அது தொடர்பான சிறந்த புரிதலுடனேயே இந்த பொறுப்பை நிறைவேற்ற ஆதரவளிக்கின்றது. சுபீட்சத்தின் நோக்கு கொள்கையை யதார்த்தமாக்குவதற்கு இந்த அரசுடன் கைக்கோர்க்குமாறு நாம் உங்களிடம் வேண்டுகோள் விடுக்கிறோம் – என்றுள்ளது.