கொரோனாவால் பலியான வசந்த் & கோ நிறுவனர்

வசந்த் & கோ நிறுவனரும் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினருமான எச்.வசந்தகுமார் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று மாலை 7 மணியளவில் காலமாகியுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த இவருக்கு கடந்த 10ஆம் திகதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் உடல் நலம் சீராக இருப்பதாக சமீபத்தில் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து இருந்தார்.

முன்னதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள எம் பி வசந்தகுமாருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்து இருந்தார்.

கன்னியாகுமரி தொகுதி எம்பியான வசந்தகுமாருக்கு வயது 70, இவரது மனைவி தமிழ்செல்விக்கும் கொரோனா ஏற்பட்டு இருந்தது. இருவரும் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு இருந்தனர்.

அவரது உயிரிழப்புக்கு காங்கிரஸ் கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.