டென்மார்க்கில் களைகட்டிய சர்வதேச தமிழர் பூப்பந்தாட்ட வெற்றிக் கிண்ணப்போட்டி!!

உலகத்தமிழர் பூப்பந்தாட்டப் பேரவையினால், ஒவ்வொரு வருடமும் உலகின் பல்வேறு நாடுகளில் நடாத்தப்படும் “சர்வதேச பூப்பந்தாட்ட (Badmintan) வெற்றிக் கிண்ணப்போட்டி” இவ்வருடம் ,டென்மார்க் Nyborg (நியூபோக்) நகரில் அண்மையில் இரு தினங்களாக இடம்பெற்றது.

இதில், கனடா,அமெரிக்கா,பிரித்தானியா, இலங்கை, இந்தியா, மலேசியா,அவுஸ்திரேலியா,பிரான்ஸ்,ஜேர்மனி,நோர்வே,சுவீடன்,,டென்மார்க்,பின்லாந்து, சுவிஸ்சலாந்து,நெதர்லாந்து,நியூசிலாந்து,, போத்துக்கல், ஆகிய உலகநாடுகள் போட்டியில் கலந்து கொண்டன.ஆண்கள், பெண்கள், தனி, மற்றும் இரட்டையர் ,மற்றும் வயது அடிப்படையில்,13 வயதில் இருந்து 60 வயதுக்கு மேற்பட்ட பல பிரிவுகளில் போட்டிகள் இடம் பெற்றது.

இலங்கை மன்னார் பகுதியில் இருந்து போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.கனடாவில் இருந்து 37 பேரும்,, பிரித்தானியாவில் இருந்து 88 பேரும் கலந்துகொண்டனர். ஒவ்வொரு வருடமும் பல்வேறு நாடுகளில் நடாத்தப்படும் இப்போட்டியானது, கடந்த வருடம் கனடாவில் நடாத்தப்பட்டது.அடுத்த வருடம் நோர்வேயில் நடாத்தப்படவிருக்கிறது.இந்த சர்வதேச ரீதியிலான போட்டிகள், வருடா வருடம் இப் பேரவையின் தலைவர் “கந்தையா சிங்கம்” மற்றும் செயலாளர் “சிவசிறீ தங்கராஜா” ஆகியோரின் வழிநடத்தலில் நடாத்தப்பட்டு வருகிறது..

உலகத்தமிழர் பூப்பந்தாட்டப் பேரவையின் ஆரம்ப ஸ்தாபகரும், தலைவருமான, கந்தையா சிங்கம் தினக்குரலுக்காக கருத்துத் தெரிவிக்கும் போது;

சுவிஸ் நாட்டில் நீண்ட வசித்து வரும் நான்,நீண்ட காலமாக இந்த துறையில் ஈடுபட்டு வருகிறேன், அந்நாளில் சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் சிறந்த உதை பந்தாட்ட வீரராக விளங்கினேன். 2006 ல் சுவிஸில் இருந்து இலங்கை சென்று, வடக்கு ,கிழக்கில் சதுரங்க விளையாடுக்கான பயிற்சிப் பட்டறைகளை நடாத்தி இருந்தேன்..

அதன் பின் உலகத் தமிழர்களை ஒன்றிணைத்து உலகளாவிய ரீதியில் Badmintan போட்டிகளை நடாத்த எண்ணி, இப்பேரவை ஆரம்பித்தேன். இதுவரை முறையே, சுவிஸ் , பிரான்ஸ் ,லண்டன் ,ஜெர்மனி கனடா ஆகிய நாடுகளிலும், இம்முறை டென்மார்க்கிலும் இப்போட்டிகளை நடாத்தினோம்….அடுத்த வருடம் நோர்வேயில் இப்போட்டிகளை நடத்தவிருக்கின்றோம்.இவ்வருடம் இலங்கையில் நடாத்த எண்ணி இருந்த இப்போட்டியானது,

கிளிநொச்சியில் நாம் எதிர்பார்த்திருந்த சர்வதேச ரீதியிலான கட்டடம் பூர்த்தி ஆகாத நிலையில், டென்மார்க்கிற்கு மாற்றி விட்டோம்.

இது போலவே,எமது நிதி நிலைமைகளை மேம்படுத்திக் கொண்டு, உலக நாடுகள் பலவற்றிலும் இருந்து போட்டியாளர்களை அழைத்து சென்று, எமது தாய் நாடான இலங்கையில் “சர்வதேச பூப்பந்தாட்ட (Badmintan) வெற்றிக் கிண்ணப்போட்டியை சிறப்பாக நடாத்துவதில் நான் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறேன்..அதை விட யாழ்ப்பாணம்,கிளிநொச்சி,வவுனியா, மற்றும் கிழக்கு மாகாணம் உட்பட நாட்டின் பல பகுதிகளில் தேசிய ரீதியிலான பூப்பந்தாட்டப் போட்டிகளை நடாத்த உள்ளோம்.எந்த ஒரு அரசியல் கலப்புமற்ற வகையில், நடுநிலைமையாக எமது பேரவையை முன்னெடுத்துச் செல்கின்றோம்.இலங்கையில் எட்டு மாவட்டங்களில் எமது கிளைகளை அமைத்துளோம்.கிழக்கு மாகாணத்தில் எமது உதவியுடன் பிள்ளைகளை உக்குவிக்கும் முகமாக போட்டிகளை நடாத்த உள்ளோம்.

உலகத் தமிழ் மக்களின் ஆதரவு நிறைவாகக் கிடைப்பதால்,ஆரம்பித்ததில் இருந்து இப்பேரவை, வேகமான வளர்ச்சியை கண்டு வருகிறது.அதோடு,என்னுடன் இணைந்து செயல் படுபவர்கள் எனக்கு சிறப்பான ஒத்துழைப்பை தந்து உதவுகிறார்கள்.இம்முறை டென்மார்க்கில் இப்போட்டிகள் சிறப்பாக இடம் பெற்றது.

கடந்த வருடம் கனடாவில் மிகவும் பிரமாதமாக நடைபெற்ற இப்போட்டியை பல கனடிய அரசியல் வாதிகளும் வந்து பார்வையிட்டு பிரமித்தனர்.

இம்முறை, கனடாவில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் 8000 டொலர்கள் செலவு செய்து, டென்மார்க் வந்து இப் போட்டியில் கலந்து கொள்வது போட்டியாளர்களின் ஆர்வத்தை காட்டுகிறது.என்று பேரவையின் தலைவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.இந்த சர்வதேச வெற்றிகிண்ணப் போட்டிக்கு, வடக்கு மாகாண கல்வி,பண்பாட்டலுவல்கள் ,விளையாட்டுத் துறை அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரன், மற்றும் ,மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா. உதயகுமார் ஆகியோரும் தமது வாழ்த்துச் செய்திகளை அனுப்பி வைத்திருந்தனர்.