பண்டாரகம, அட்டலுகம, மாரவ பிரதேசத்தில் இன்று ஏற்பட்ட குழப்பநிலை தொடர்பில் 15 வயதுடைய சிறுமி உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் போதைப் பொருள் சுற்றிவளைப்பிற்கு சென்ற பொலிஸ் அதிகாரிகள் மீது கஞ்சா விற்பனையாளர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
அங்கு பொலிஸ் பரிசோதகர்கள் இருவர் உட்பட பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் இருவரும் காயமடைந்துள்ளனர்.
“கொட்டுகொல ரிபாய்” என்ற பெயருடைய போதை பொருள் விற்பனையாளர், குறித்த பிரதேச வீடு ஒன்றில் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக பண்டாரகம பொலிஸாரிற்கு தகவல் கிடைத்துள்ளது.
அதற்கமைய பொலிஸ் அதிகாரிகள் இன்று காலை 8.30 மணியளவில் குறித்த பிரதேசத்திற்கு சென்றுள்ளனர்.
அங்கு வீட்டில் இருந்தவர்கள் சிலர் பொலிஸ் அதிகாரிகளுக்கு தடை ஏற்படுத்தியுள்ளனர். பின்னர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண்கள் குறித்த பெண் அதிகாரிகள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இதன் போது பொலிஸார் அங்கிருந்த ஒருவரை கைது செய்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டனர். கைது செய்யப்பட்டவரை விடுவிக்க அங்கிருந்த பெண்கள் முயற்சித்த போது மற்றொருவர் கத்தியுடன் வந்து பொலிஸாரை தாக்க முயற்சித்துள்ளார்.
இதனால் 4 பொலிஸாரும் காயமடைந்துள்ளனர். அத்துடன் பெண்கள் மூவர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 15 வயதுடைய சிறுமி ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்டவர்கள் நால்வரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களாகும். மேலும் 6 பேரை கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.