ஜனாதிபதியின் அதிரடி நடவடிக்கை! தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கை ஆயிரமாக அதிகரிக்கத் திட்டம்

நாட்டில் மொத்த தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை ஆயிரமாக அதிகரிப்பது அதில் ஒன்றாகும். தற்போதுள்ள சில தேசிய பாடசாலைகள் பெயரளவிலேயே காணப்படுகின்றது. தேவையான வசதிகள் எதுவும் அவற்றில் இல்லை. அவ்வாறான பாடசாலைகளும் உடனடியாக அபிவிருத்தி செய்யப்படும் என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி, அனைத்து இராஜாங்க அமைச்சர்களுடன் இன்று (10) ஜனாதிபதி அலுவலத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் மக்களுக்கும் சமூக மேம்பாட்டிற்கும் காரணமாக அமையக்கூடிய பல தீர்மானங்களை எடுத்தார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு அனுப்பிவைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

பாடசாலை கட்டமைப்பின் முன்னேற்றத்திற்காக மாவட்ட கல்வி குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி உள்ளிட்ட இராஜாங்க அமைச்சர்கள் தீர்மானம் ஒன்றை மேற்கொண்டனர். வலயக் கல்வி காரியாலயங்கள் மற்றும் கோட்டக் கல்வி காரியலயங்களுக்கிடையில் தொடர்பை பலப்படுத்துவதற்கும் இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

ஆசிரியர் இடமாற்றம் மற்றும் மாணவர்களை பாடசாலைகளுக்கு உள்வாங்குதல் தவிர்ந்த பாடசாலை கட்டமைப்பின் முன்னேற்றத்திற்கு காரணமாக அமையக்கூடிய அனைத்து செயற்பாடுகளுக்கும் பங்களிக்கக்கூடிய சந்தர்ப்பம் அரசியல்வாதிகளுக்கு உள்ளது. அது பொது நலனை நோக்கமாகக்கொண்டதே தவிர, அரசியல் தலையீடு அல்ல என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

நாட்டில் பாடசாலைகளில் உள்ள அதிபர் பற்றாக்குறையை நிரப்புவதற்காக பதில் அதிபர்களை நியமிப்பது தொடர்பாகவும் இன்றைய கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது. ஆசிரியர் யாப்புக்கமைய ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் பரீட்சைகளை நடாத்த வேண்டும்.

அதிபர்களின் பற்றாக்குறைக்கு பிரதான காரணமாக அது முறையாக இடம்பெறாமையை குறிப்பிடலாம். பாடசாலைகளில் இருக்கின்ற திறமையான மற்றும் அனுபவம் கொண்ட ஆசிரியர்களை பதில் அதிபர்களாக நியமிப்பதற்கு உள்ள வாய்ப்புக்களை கண்டறிவதற்கும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது – என்றுள்ளது.