தனியார் நிறுவனத்தின் பொறுப்பற்ற செயல்…செம்மணி பகுதியில் ஏ9 வீதியை மறித்து போராட்டம்!

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் பெருமளவு மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதற்கு எதிராக நல்லூர் பிரதேசசபை உறுப்பினர்கள், ஏ.9 வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக சுமார் 20 நிமிடம் ஏ9 வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டது.

செம்மணி பகுதியில் பெருமளவு மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டுள்ள நிலையில் தனியார் நிறுவனமொன்றே இதனுடன் தொடர்புபட்டிருக்கலாமென கருதப்படுகிறது.

இது தொடர்பில் அறிந்த நல்லூர் பிரதேசசபை உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

இதனையடுத்து , மருத்துவ கழிவை கொட்டிய தனியார் நிறுவனத்தின் சுத்திகரிப்பு தொழிலாளர்கள் அங்கு சென்று, கழிவுகளை அகற்ற முயன்றபோது அதற்கு அனுமதிக்கப்படவில்லை.

அத்துடன் அவர்களின் செயலை கண்டித்து, நல்லூர் பிரதேசசபை உறுப்பினர்கள் ஏ9 வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து பொலிசார், போராட்டக்காரர்களுடன் பேசியதை அடுத்து பாடசாலை மாணவர்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாதவகையில் தற்போது வீதியோரமாக போராட்டத்தில் ஈடுபட்டுவருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.