யாழில் 15 வயது சிறுமி துஷ்பிரயோகம்: மூவர் கைது!

தென்மராட்சி பகுதியில் சிறுமியொருவரை துஷ்பிரயோகம் செய்த சந்தேகத்தில் மூவர் கைது செய்யப்பட்டனர். 15 வயதான சிறுமியும் பொலிசாரினால் பொறுப்பேற்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தென்மராட்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பிரதேசமொன்றில் நேற்று (10) இந்த சம்பவம் நடந்தது.

தந்தையும், தாயும் வெவ்வேறு திருமணங்கள் முடித்து தனித்தனியாக வாழ்ந்து வந்த நிலையில், தனது தாத்தாவின் பராமரிப்பில் வசித்து வந்த 15 வயதான சிறுமியே பொலிசாரினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளார்.

சிறுமியின் வீட்டிற்கு சில ஆண்கள் தொடர்ச்சியாக வந்து செல்வது குறித்து, கிராம சேவகர் மற்றும் பிரதேசசெயலக சிறுவர் நன்னடத்தை பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. அவர்கள் இந்த விவகாரத்தை கண்காணித்து சிறுமிக்கு சில அறிவுறுத்தல்களை வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், நிலைமையில் முன்னேற்றம் தென்படாததையடுத்து, அயலவர்களால் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, அதிரடியாக செயற்பட்ட பொலிசார் நேற்று விட்டை முற்றுகையிட்டனர்.

இதன்போது 15 வயதான சிறுமி, மற்றும் திருமணமான இரண்டு ஆண்கள் அந்த வீட்டில் தங்கியிருந்துள்ளனர். சிறுமியின் பராமரிப்பாளரான தாத்தா வீட்டிலிருக்கவில்லை.

இதன்போது சம்பவ இடத்தில் பிரசன்னமாகிய 22 வயதான ஒரு இளைஞனும் கைது செய்யப்பட்டார்.