யாழ் பல்கலைகழகத்தின் 120 புதுமுக மாணவர்களிடம் நிர்வாண படங்களை கேட்டு மிரட்டல்: இணையவழி பகிடிவதை!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புதுமுக மாணவர்கள் மீது இணையவழி பகிடிவதை நடைபெறுவதாக கொழும்பிலிருந்து வெளியாகும் சிலோன் ருடே ஆங்கில இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. புதுமுக மாணவர்கள் வட்ஸ்அப் வழியாக நிர்வாண புகைப்படங்களை அனுப்பும்படி வலியுறுத்தப்படுவதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிலோன் ருடே செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவது,

இரண்டு சிரேஷ்ட மாணவர்களும், இரண்டு சிரேஷ்ட மாணவிகளும் இந்த மோசமான பகிடிதையில் ஈடுபட்டுள்ளனர். வட்ஸ்அப் மற்றும் பிற சமூக ஊடகங்களில் வழியாக நிர்வாண புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் சுயஇன்பம் செய்யும் காட்சிகளை அனுப்புமாறு கட்டாயப்படுத்தி வருகின்றனர். அவர்களின் கட்டளைக்கு செவிசாய்க்க மறுத்தவர்கள் பல்கலைக்கழகத்திற்கு வரும்போது கடுமையான விளைவை சந்திக்க வேண்டியிருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

3ஆம்,4ஆம் ஆண்டு மாணவர்களான இந்த பகிடிவதை குழு, கிட்டத்தட்ட 120 புதுமுக மாணவர்களை பகிடிவதைக்கு உள்ளாக்கியுள்ளனர். அவர்களின் மிரட்டலிற்கு அஞ்சிய புதுமுக மாணவர்களில் பெரும்பாலானவர்கள் இதுபோன்ற படங்களை அவர்களிற்கு அனுப்பியுமுள்ளனர்.

கொரோனா தொற்றையடுத்து லொக்டவுன் அறிவிக்கப்பட்ட பின்னர் பெரும்பாலான விரிவுரைகள் இணையவழியாக நடத்தப்பட்டன. இந்த காலகட்டத்தில் இந்தவகையான இணையவழி பகிடிவதை தொடங்கியது.

இந்த மோசமான பகிடிவதை காரணமாக, பல புதுமுக மாணவர்கள் பல்கலைகழகத்திற்கு செல்ல விரும்பில்லை.

இது தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகத்தின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டிருந்தாலும், யாழ் பல்கலைகழக நிர்வாகம் இன்றுவரை எந்த உருப்படியான நடவடிக்கையும் எடுக்கவில்லையென குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, பெரதெனியா பல்கலைகழகத்தின் பொறியியல் பீட இரண்டாம் ஆண்டு மாணவர்கள் பல்கலைகழக வளாகத்திற்குள் நுழைவதற்கு நேற்று (16) முதல் நிர்வாகம் தடைவிதித்திருந்தது.

பல்கலைக்கழக நிர்வாகம் விடுதிகளில் உள்ள பொறியியல் பீடத்தின் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் உடனடியாக வளாகத்தை காலி செய்யுமாறு அறிவித்திருந்தது.

இரண்டாம் ஆண்டு மாணவர்களின் பரீட்சைகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும். ஆனால் மீதமுள்ள பீடங்களின் நடவடிக்கைகள் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.