பிரான்ஸில் தங்கைக்கு குடியுரிமை பெறுவதற்காக முல்லைத்தீவில் அக்கா செய்த செயல்!

பிரான்ஸில் தங்கைக்கு குடியுரிமை பெற்றுக் கொடுப்பதற்காக தனது பெற்றோர் போரில் உயிரிழந்ததாக போலி சான்றிதழ் தயாரித்த அக்கா உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த போலிச் சான்றிதழ் செயற்பாட்டிற்கு உதவியாக கூறப்படும் கிராம சேவகர், முல்லைத்தீவு திடீர் மரண பரிசோதகர், ஊழல் மோசடி பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த பெண் பிரான்ஸில் தங்கியிருக்கும் தனது தங்கைக்கு அந்த நாட்டில் குடியுரிமை பெற்றுக் கொள்வதற்காக கிராம சேவகர் மற்றும் மரண பரிசோதகரின் உதவியுடன் தனது பெற்றோர் போரின் போது உயிரிழந்துள்ளதாக மரண சான்றிதழ் தயாரித்துள்ளார்.

விசாரணைகளில் உறுதியான தகவல்களுக்கமைய குறித்த பெண்ணின் தந்தை 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24ஆம் திகதி முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் புற்றுநோயினால் உயிரிழந்துள்ள நிலையில் அவரது தாயார் இன்னமும் உயிருடன் வாழ்ந்து வருகின்றார்.

எப்படியிருப்பினும் இருவரும் உயிரிழந்ததாக கூறி சட்ட ரீதியான மரண சான்றிதழ் ஒன்று 2018ஆம் ஆண்டு மே மாதம் 9ஆம் திகதி பதிவு செய்யப்பட்டுள்ளது.

விசாரணைகளுக்கமைய போலி தகவல் தயாரித்த கிராம சேவகர் மற்றும் மரண பரிசோதகர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.