செட்டிக்குளம் பிரதேச சபையை சுதந்திரக் கட்சியும், மக்கள் காங்கிரஸும் இணைந்து கைப்பற்றின

வென்கலச் செட்டிக்குளம் பிரதேச சபையை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் இணைந்து கைப்பற்றின.

செட்டிக்குளப் பிரதேச சபையில் இன்று மாலை இடம்பெற்ற தவிசாளர், பிரதித் தவிசாளர் தெரிவின் போது தவிசாளராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சார்ந்த ஆசீர்வாதம் அந்தோனிப்பிள்ளை 7 வாக்குகளைப் பெற்றுத் தெரிவு செய்யப்பட்டார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 4 வாக்குகளும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இரண்டு வாக்குகளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனையின் 1 வாக்கும் இவருக்கு கிடைக்கப் பெற்றன.

இவரை எதிர்த்துப் போட்டியிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த ஜெகதீஸ்வரனுக்கு 6 வாக்குகளும் தமிழர் விடுதலைக் கூட்டனியைச் சேர்ந்த டெல்சனுக்கு 3 வாக்குகளும் கிடைத்தன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஜெகதீஸ்வரனுக்கு ஆதரவாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் வாக்களித்தது.

பிரதித் தவிசாளர் தெரிவில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸைச் சேர்ந்த நவரட்ணம் சிவாஜினி 7 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.

இவருக்கு ஆதரவாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 4 வாக்குகளும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் 2 வாக்குகளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனையின் 1 வாக்கும் கிடைக்கப் பெற்றன.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தமிழ்ப் பெண் உறுப்பினரை பிரதித் தவிசாளர் ஆக்கியுள்ளமை குறிப்பிடத் தக்கது.