தமிழர் தாயகத்தில் திடீர் மாற்றம்! மிரண்டுபோயுள்ள ராஜபக்ஷ அரசு

தமிழ் கட்சிகளின் ஒற்றுமையைக் கண்டு ராஜபக்ஷ அரசு மிரண்டுபோயுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார்.

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு அரசு விதித்த தடையால், தமிழர் தாயகத்தில் மிகப்பெரிய மாற்றம் நடந்தேறியிருக்கின்றது. தமிழ் தேசியத்தை உயிர்நாடியாகக் கொண்ட அனைத்துக் கட்சிகளும் ஓர் புள்ளியில் இணைந்துள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்க அரசு விதித்துள்ள தடை குறித்து செய்தியாளர்களுக்கு கருத்த தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர்,

ஆயுதப் போராட்டத்தின் பின்னரான தமிழ் அரசியலில் பிரிவுகளால் தமிழ் மக்கள் வெந்து வெதும்பி வெறுத்துபோயிருந்த சூழலில், இந்த ஒற்றுமை என்பது புதியதொரு ஒளிக்கீற்றாய் பிரகாசிக்கத் தொடங்கியிருக்கின்றது.

இந்த ஒற்றுமை இன்னமும் வலுப்படவேண்டும் என்ற மக்களின் எதிர்பார்ப்புக்களை தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் தங்கள் இதயத்தில் இருத்திக் கொள்ளவேண்டும்.

இந்த ஒற்றுமைக்கு வேட்டு வைப்பதற்கு, கட்சிகளைப் பிளவுபடுத்தி அதில் வெற்றி காணும் தென்னிலங்கை அரசியல் தரப்புக்களின் எடுபிடிகள் முயற்சிகளை முன்னெடுப்பார்கள். தமிழ் கட்சிகள் அவதானமாகச் செயற்படவேண்டும்.

இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் படி தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்த உறுப்பினர்களுக்கு இலங்கை அரசு பொதுமன்னிப்பு வழங்கிய பின்னரே, தியாக தீபம் திலீபன் தனது உணவு ஒறுப்புப் போராட்டத்தை 1987ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 15ஆம் திகதி ஆரம்பித்தார்.

அவரது 5 அம்சக் கோரிக்கைகளில் தனி நாட்டை வலியுறுத்தும் எவையும் இடம்பெறவில்லை.

இப்படியான நிலையில் தியாக தீபம் திலீபனை அரசு எவ்வாறு பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர் என்று முத்திரை குத்த முடியும்.

அவரை நினைவுகூர்வதை பயங்கரவாதச் செயற்பாடு என்றும், பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் செயற்பாடு என்றும் எப்படிக் கூறமுடியும்.

இன்று ராஜபக்ஷ அரசில் அமைச்சராக இருக்கும் வாசுதேவ நாணயக்கார, தியாக தீபம் திலீபன் உணவு ஒறுப்புப் போராட்டத்தில் பங்கேற்றிருந்த போது நேரில் வந்து பார்வையிட்டிருந்தார்.

திலீபனை நினைவு கூர்வது ஒருபோதும் பயங்கரவாதமாகாது. அரசு அதை உணர்ந்து கொள்ளவேண்டும்.

வெறுமனே தமிர்களை வஞ்சிப்பதற்காகவே ‘பயங்கரவாத’ கோசத்தை ராஜபக்ஷ அரசு தூக்கிப் பிடிக்கின்றது என்பதை சர்வதேச சமூகம் உள்ளிட்ட சகலரும் உய்த்தறிந்து உணர்ந்து கொள்ளவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.