சிறுமி விவகாரத்தில் கடற்படை சிவில் உத்தியோகத்தரிற்கு நீதிபதி இளஞ்செழியன் அதிரடி உத்தரவு

திருகோணமலை டொக்கியாட் கடற்படைத் தளத்தில் உள்ள திஸ்ஸ சிங்கள வித்தியாலயத்தில் சிங்கள மொழி மூலம் கல்வி கற்ற 10 வயது நிரம்பிய இஸ்லாமிய மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றவாளிக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.

திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இத்தீர்ப்பினை நேற்று வழங்கினார்.

2010ம் ஆண்டு மார்ச் மாதம் முதலாம் திகதி தொடக்கம் டிசம்பர் 31ம் திகதி வரையான காலப்பகுதியில் கடற்படைத் தளத்தில் சிவில் உத்தியோகத்தராக கடமையாற்றிய எதிரி கடும் பாதுகாப்பு நிரம்பிய பாடசாலை வளாகத்திலும், நீச்சல் தடாகத்திலும், திருகோணமலை நீதிமன்ற வீதியிலுள்ள சிறுமியின் வீட்டிலும் சிறுமியை துஷ்பிரயோகம் மேற்கொண்டதாக மூன்று குற்றச்சாட்டு அடங்கிய குற்றச்சாட்டுப் பத்திரம் திருகோணமலை மேல் நீதிமன்றில் சட்டமா அதிபரால் கடந்த 2019 பெப்ரவரி மாதம் 14ம் திகதி தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த சிவில் உத்தியோகத்தர் பாதிக்கப்பட்ட சிறுமியின் சிங்கள பாட ஆசிரியராக தன்னை அடையாளப்படுத்தியே இந்த குற்றச் செயலை புரிந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இந்நிலையில், சிங்கள வகுப்பாசிரியரின் கவனத்திற்கு கொண்டு சென்றதும் தனக்கு தம்பி யாரும் இல்லையென ஆசிரியர் தெரிவித்த நிலையிலேயே பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டு சம்பவம் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் குறித்த விசாரணை முடிவுற்று, எதிரிக்கு திறந்த நீதிமன்றில் இன்று மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பு வழங்கியிருந்தார்.

குற்றவாளிக்கு எதிராக மூன்று குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில், அவர் மூன்றிலும் குற்றவாளியாக இனங்காணப்பட்டிருந்தார்.

10 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டுக்காக 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்ததுடன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்குமாறும், குறித்த நஷ்ட ஈட்டை செலுத்த தவறினால் ஒரு வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்குமாறும் நீதிமன்றம் கட்டளையிட்டது.