கனடா செல்ல காத்திருப்போருக்கு அந்நாட்டு அமைச்சர் வெளியிட்டுள்ள மகிழ்ச்சியான செய்தி!

கனடாவில் புலம் பெயர்ந்து வாழ்வோர் தமது வாழ்க்கைத் துணையை கனடாவிற்கு அழைப்பதற்காக விண்ணப்பித்தவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியொன்றை கனடாவின் குடிவரவு, குடியகல்வு மற்றும் அகதிகள் விவகாரங்கள் ஆகியவற்றுக்கு பொறுப்பான அமைச்சர் Marco E. L. Mendicino அறிவித்துள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,

வாழ்க்கை துணைகளை அழைக்க விண்ணப்பித்த கனடியர்கள் தங்கள் குடும்பங்களோடு ஒன்றிணையும் வகையில் விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் பணிகளை துரிதப்படுத்தும் வகையில் தனது அமைச்சின் அதிகாரிகளுக்கும் வெளிநாடுகளில் உள்ள கனடாவின் தூதரங்களுக்கும் பணிப்புரைகளை வழங்கியுள்ளார்.

இவ்வாறான துரித நடிவடிக்கைகளை எடுக்கும் விடயத்தில் கனடாவின் குடிவரவு, குடியகல்வு மற்றும் அகதிகள் விவகாரங்கள் அமைச்சானது, கனடாவிலும் வெளிநாடுகளில் உள்ள தூதரங்களிலும் வாழ்க்கைத்துணைகளுக்கு கனடாவிற்கு செல்லும் நாளை விரைந்து தீர்மானிப்பதற்கான பணிகளில் இறுதித் தீர்மானம் எடுக்கும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் விசாக்களுக்கான விண்ணப்பங்களை பரிசீலிக்கும் குழுவினர் இனிமேல் மொத்த விண்ணப்பங்களில் சுமார் 66 வீதமான விண்ணப்பங்கள் வாழ்க்கைத் துணைகளை அழைக்கும் விண்ணப்பங்கள் என்ற வகையில் முக்கியத்துவம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்படுகின்றது.

விண்ணப்பப் படிவங்கள் மூலமான விசா விண்ணப்பங்களைப் பரிசோதிக்க புதிய தொழில்நுட்பத்தின் அடிப்படையில் வேகமாக செயற்பாடுகளை செய்யும் வகையில் அமைச்சின் உத்தியோகத்தர்களுக்கும் தூதரங்களில் உள்ள உத்தியோகத்தர்களுக்கும் தகுந்த பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சரின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் விண்ணப்பங்களுக்குரியவர்களை நேரடியாக அலுவலகங்களுக்கு அழைத்து நேர்முகப்பரீட்சைகளை நடத்துவதற்குப் பதிலாக, இணையவழி ஊடாக நேர்முகப் பரீட்சைகளை நடத்தும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாழ்க்கைத் துணைகளை அழைக்கும் விடயம் தொடர்பாக தனது கருத்தை பதிவு செய்துள்ள அமைச்சர் Marco E. L. Mendicino கடந்த சில மாதங்களாக இந்தப் பணிகளை நாம் விரைவாகச் செய்ய முடியவில்லை.

இனிவரும் காலங்களில் வாழ்க்கைத் துணைகளை அவர்களுக்கு உரியவர்களோடு இணைப்பதற்கான துரிதமான பணிகளை எமது அமைச்சு அதிகாரிகளும் பணியாளர்களும் சிறந்த முறையிலும் விரைவான முறையிலும் செய்வார்கள் என்று நாம் நிச்சயமாக நம்புகின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.